 |
அடிகள்
இவர் பெயா�ல் அடிகள் என வந்திருப்பதைக்கொண்டு சிலர், கடவுளின்
அடியார்க்கெல்லாம் அடிகளெனவழங்குவதால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரே
எனச் சாதிக்கின்றார்கள்.
"வாயில் காவலர் மன்னவன்றனை எதிர்வணங்கி
ஆயமாகிவந்து அடிகள்மார் அணைந்தனர்"
(பொ�யபுராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், 681)
எனப் பொ�ய புராணத்தில் ஜைன முனிவர்களை அடிகள் என்றே சேக்கிழார் பல
இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வுண்மையை அறிந்தும் சிலர்
மறந்தமைக்குக் காரணம் சமய பேத உணர்ச்சியே யாகும். கவுந்தியடிகள்
என்பதில் அடிகள் என்ற சொல் வந்திருப்பதால் இத்தவச்செல்வியையும்
மற்றொரு காரைக்கால் அம்மையாராக இரண்டாம் பதிப்பில் எழுதி விடுவார்
போலும். அடிகள் என்ற சொல்லை ஒழுக்கத்தாலும், ஞானத்தாலும் சிறந்த ஜைனத்
துறவிகளைக் குறிக்கவே வழங்கியுள்ளனர். கோவலன் இளமை வெறி கொண்டு
ஒழுக்கங் குன்றியவனாயினும், பின்னர் தனது குற்றங்களை அறிந்து, சாவக
நெறி நின்று, ஒழுகுவானாயின். இவனது ஒழுக்க மேன்மையைக்கண்ட மாதா�
கோவலனைக் குறித்துப் பேசும்போது,
"மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி
ஏத மில்லா விடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூ ணங்கையொடு நாள் வழிப்படூஉம்" (சிலப்பதிகாரம், 2:16:15-19)
எனக் கோவலனை 'அடிகள்' என்றே அழைக்கிறாள். அரும்பத உரையாசிரியரும்,
அடியார்க்குநல்லாரும் அடிகள் என்பது கோவலனாரை என்றும், சாவக நோன்பிகள்
என்பதால், இரவுண்ணா நோன்பிகள் என்றும் உரை செய்திருக்கின்றார்கள்.
இதனால் துறவாது விரதங் காக்கும் ஜைன சமயப் பொ�யோர்களையும் அடிகள்
என்றே அழைப்பது வழக்கமாகும். இவ்வுண்மைகளைச் சீவகசிந்தாமணி,
சூளாமணிபோன்ற ஜைன இலக்கியங்களில் காணலாம்.
மேலும் ஜைன சமய சம்பந்தமான குகைக் கோயில்களின் கல்வெட்டுக்களில் ஜைன
சமயத் துறவிகள் அடிகள் என்றே பொறிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருநெல்வேலி ஜில்லா கழுகுமலையில் நூற்றுக்கணக்கான ஜைன விக்கிரகங்களை
செதுக்கியுள்ள பாறையிலும், மதுரைக்கடுத்த சமணர் மலையிலும், குணசேனப்
பொ�யடிகள், கனக வீரப் பொ�யடிகள், குணவீரக் குருவடிகள், பலதேவக்
குருவடிகள் மாணாக்கர், விமல சந்திரக் குருவடிகள் மாணாக்கர்,
சந்திரசேன அடிகள், திருச்சரண அடிகள் எனப் பல ஜைன முனிவர்களின்
பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
மேலும் ஜைன சமயத்தார் தங்கள் தீர்த்தங்கரர்களையும், ஆசாரியர்களையும்
அவர்தம் திருவடிகளையே வைத்து பூசிப்பது வழக்கம். இதனைச் சம்மேத சிகரம்,
பாவாபுரி, மயிலை திருவள்ளுவர் கோயில், பொன்னூர் குந்த குந்தர்மலை,
திருப்பறம்பூர் அகளங்கர் மண்டபம், திருப்பருத்திக்குன்றம் கோயில்,
மதுரை சித்தர்மலை மற்றும் பல ஜைனத் திருப்பதிகளிலும் காணலாம். ஜைன
சமய தர்மங்களையும், பெயர்களையும் தங்களுக்கும், தங்கள் கடவுளுக்கும்
ஏற்றிக்கொள்ளும் வழக்கத்தைப் பிற்காலத்தில் சைவ, வைணவ சமயத்தினர்
கையாள ஆரம்பித்து விட்டார்கள். அவ்விரு சமயங்களிலும் பண்டையோர்
பெயர்களில் யாருக்கேனும் அடிகள் என்ற பட்டம் வழங்கியுள்ளனரா?
நாயனார்
நாயனார் என்ற பெயரும் ஜைன சமயத்திற்கே
உரியது! அருகன் கோயிலைக்
குறிப்பிடும் போதெல்லாம் அரும்பதவுரை ஆசிரியர் ஸ்ரீகோயில் நாயனாரை
என்றே எழுதியுள்ளார். அது மட்டுமல்ல. கழுகுமலைக் கல்வெட்டுக்களில்
ஜைன முனிவர் பெயர்கள் நாயனாரென்றே செதுக்கப்பட்டுள்ளன. எனவே, நாயனார்
என்பதையும் சைவ சமயத்தவர் பிற்காலத்தில் தங்கள் அடியார்களுக்குச்
சேர்த்துக்கொண்டார்களென்பதும் அறியதற்குரியது.
மேலே கூறிய இரண்டு உரையாசிரியர்கள் காலம்வரை அடிகள் என்ற பட்டமும்,
நாயனார் என்ற பெயரும் ஜைன சமயத்திற்கே
உரியவையாயின என்பது உறுதி!
"ஊனுலாம் வெண்டலை கொண்டூரூர் பலிதிரிவான்"
"பாரேறு படுதலையின் பலிகொள்ளும் பரம்பரனை"
"பல்லுயிர் பலி
திரிவார் பைங்கணோற்றார் பலியேற்றார்"
"வெண்டலைப் பலி கொளும் விமலர்"
என்ற கோலத்தையுடையவரைத் தயாமூலதன்மன் என்றும், எண் குணத்தான் என்றும்,
தேவாரங்களில் நுழைந்திருக்கும் போது, இந்த இருபதாம் நூற்றாண்டில்
அடிகள் என்ற பதம் எங்களுக்கே
உரியது எனச் சைவர் வாதிப்பது வியப்பன்று.
திரு
ஜைன சமயத்தில் ஜைன கோயில்களுக்கும், ஊர்களுக்கும், ஏன் அறநெறிக்கும்
'ஸ்ரீ' என்னும் எழுத்தை அடையாகச் சேர்ப்பார்கள். அதாவது ஸ்ரீகோயில்,
ஸ்ரீபுரம், ஸ்ரீநகர், ஸ்ரீதர்மம் என்று அழைப்பார்கள். இக்கொள்கையைப்
பின்பற்றியே ஜைன சமயத் தமிழ் புலவர்கள் ஸ்ரீ என்னும் எழுத்திற்கு 'திரு'
என முதன்முதல் எழுதினார்கள். அத்திருதான் திருக்கோயில், திருபுரம்,
திருநகர், திருவறம் என இன்றும் இலக்கியங்களில் குறிக்கப்படுதலைக்
காண்கின்றோம். அம்முறையிலேயே நமது அரும்பத உரை ஆசிரியர் 'திருக்குணவாயில்'
எனக்கூறி அருகன் கோயிலென்பதை அழகுற அறிவித்துள்ளார். பிற்காலத்தில்
எல்லா மதத்தினரும் அத் திருவைத் தங்கள் சமய ஊர்களுக்கும்,
கோயில்களுக்கும் சேர்த்துக்கொண்டதால், இக்கால ஆராய்ச்சியாளர்களுக்குத்
'திருக்குணவாயில் கோயில்' என்றால் உண்மை விளங்கவில்லை. சிலர் உண்�யை
அறிந்திருந்தும் ஆசிரியர் சமயத்தை மாற்ற வேண்டிப் பொருந்தாதவற்றைக்
கூறி, நூல் வடிவாகவும் துணிந்து எழுதிவிடுகிறார்கள்.
ஊழ்வினை
இளங்கோவடிகள் தமது சமயத்தை உலகத்தவர் அறிந்து கொள்ளவேண்டிய
காவியத்தில் ஜைன சமயக் கொள்கைப்படி இல்லறம், துறவறம் ஆகிய இரண்டு
பேரறங்களையும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை
ஆகியவைகளோடு, மக்கள் கதித் துன்பம், விலங்கு கதித் துன்பம், நரகக்
கதித் துன்பம், தேவ கதித் துன்பம் ஆகிய நாற்கதித் துன்பங்களையும்,
தானம், தவம், சீலம், அறிவர் சிறப்பு, ஆகிய நான்கின் பயன்களையும்
விளக்கியுள்ளார். மேலும் ஊழ்வினையின் செயலைப் பற்றி பேசுங்காலை,
வினையைச் செலுத்தும் கர்த்தா ஒருவர் உண்டெனும் சைவ சமயக்
கோட்பாட்டிற்கு மாறாக வினையானது தற்செய்த கிழவனைத் தானே வந்தடையும்
இயல்பினையுடையதென்னும் ஜைன சமயத் தத்துவப்படி "ஊழ்வினை யுருத்து
வந்தூட்டும்" என்று பதிகத்திலும், "யாழிசைமேல் வைத்துத்தனூழ்வினைவந்
துருத்ததாகலின்" என்று கானல் வா�யில் மாதவியைக் கோவலன்
பிரிந்த
நிலைமையின் மேல் வைத்தும் பேசுகின்றார்.
கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு கதிரவன் புறப்படுவதற்கு முன்பே
புறப்பட்டான். இதனை அடிகள்,
"வினைகளைக் கூட்ட வியங்கொண்டான்கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்" (சிலப்பதிகாரம், 1:9:78-79)
என ஊழ்வினை வந்து சேர அதன் ஏவலை மேற்கொண்டான் என்றார். இவ்வாறே
பாண்டியன் நெடுஞ்செழியன் பொற்கொல்லன் கூற்றை நம்பி கோவலனைக் கொல்லப்
பணித்ததையும் தீவினையின் செயலே என விளக்கிச் செல்கின்றார்.
கோவலன் வெட்டுண்டச் செய்தியைக் கேட்டாள் கண்ணகி. வாய் விட்டுப்
புலம்பி நின்றாள். ஊரைச் சுற்றிப் புலம்பிக்கொண்டே வருகின்றாள்.
ஆற்றொணா அழுகையில் ஊழ்வினையின் கொடுமையை,
"மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு,
என்னுறு வினைகாண். ஆ! இது" என உரையாரோ?"
"பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப,
ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது என உரையாரோ?"
"மன்பதை பழிதூற்ற, மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினை காண்; ஆ! இது" என உரையாரோ?"
எனக் கூறி புலம்புகிறாள். (சிலப்பதிகாரம், 2:9:41-42, 45-46, 49-50)