 |
நிலையாமை
இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரறங்களிலும் மனம் செல்ல வேண்டின்
நிலையாமைத் தத்துவம் இன்றியமையாதது. யாக்கை நிலையாமை, செல்வம்
நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய உண்மைகளை உணர்ந்தாலன்றி நல்லனவற்றைச்
செய்ய மனம் ஒருப்படாது. இந்நிலையாமைத் தத்துவம் மனத்தகத்தே
வேரூன்றியதும், பிறருக்கு நன்மை செய்வதிலும் பொது நலத்தில்
அக்கறைகொள்வதிலும் உள்ளம் விழையும்; தீமைகளைச் செய்ய நடுங்கும். எனவே
நிலையாமைத் தத்துவம் மக்களுக்கு இன்றியமையாததாகும். இப்பேருண்மையையும்
தொல்காப்பியத்தில் காணலாம்.
"காஞ்சி தானே பெருந்திணைப் புறனே"
"பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல்காப்பியம், புறத்திணை இயல்,
22, 23)
"காஞ்சி என்னும் புறத்திணை பெருந்திணையென்னும் அகத்திணைக்குப் புறனாம்.
அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியானும் நில்லாத உலகத்தைப்
பொருந்திய நெறியை உடைத்து. பாங்கருமையாவது ஒருவற்கு ஒரு துணையாகாமை.
நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை
நிலையாமை என" என்பர் இளம்பூரணர்.
"சென்ற உயிரின் நின்ற யாக்கை" (தொல்காப்பியம், பொருளியல், 8)
"காலம், உலகம், உயிரே, உடம்பே" (தொல்காப்பியம், கிளவியாக்கப், 58)
என ஆன்மா வேறு, உடல்வேறு எனும் தத்துவத்தையும்.
உயிர் வேறு உடல் வேறு
"ஒன்றே வேறே என்றுஇரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப, (தொல்காப்பியம், களவியல் 2)
என்பது ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறு
பிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு"
என்னும் இளம்பூரணார் உரையால் ஊழ்வினை உண்டெனும் உண்மையையும் அறியலாம்.
"ஊழிற் பெருவலி யாவுள" என்பது தமிழ் மறையல்லவா? "ஊழ்வினை வந்து
உருத்தும்" என்பதை இளங்கோவடிகள் விளக்கிச் செல்வதைப் புலவர் உலகம்
நன்கு அறியும். இவ்வாறே உலகம் ஒருவராலும் படைக்கப் பட்டதல்ல. இயற்கைத்
தோற்றமே உலகம் என்பதையும் தெளிவுறுத்தியுள்ளார்.
இவை போன்றே அந்தணர், ஐயர், இந்திரன், வேள்வி, ஆறறிவுயிர்கள்
ஆகியவற்றைப் பேசும் சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன.
இங்கு அவைகளை விளக்குவதாயின் பெருகும் என அஞ்சி விடுத்து மேற்செல்வோம்.
இவைகள் யாவும் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையல்ல; அறத்தின்
அடிப்படையில், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனால் உலகம்
அனைத்திற்கும் அருளப்பட்டவை.
தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலப்பிரிவுகளும்,
அவைகளுக்குரிய மாயோன், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களும்,
வழிபாடுகளும் இருந்தன. இவை மட்டுமல்ல!
சூரியன், சந்திரன், கொற்றவை
முதலான தெய்வங்கள் வழிபாடும் இருந்தது. அந்தந்த நிலங்களின் அமைப்புக்
கேற்ப மக்கள் பண்பாடும் தெய்வ வழிபாடும் அமைந்திருந்தன.
உயிர்ப்பலிகளும், புலால் படைப்பும், தங்கள் தங்கள் தலைகளை வெட்டிப்
பலியிடுதலுமாகிய கொடுஞ்செயல்களும் மலிந்திருந்தன. இவை தொன்றுதொட்டு
நடந்து வந்தவை. எந்த மதத்தையும் சேர்ந்தவையல்ல. தொல்காப்பியம்,
இலக்கண நூல் என்றாலும், தமிழகத்தில் நிலவியிருந்த பல்வேறு பழக்க
வழக்கங்களையும் விளக்கிக் கூறுகிறது. ஆனால், தொல்காப்பியர் அறநெறியை
மேற்கொண்டவர். அதனாற்றான் அறநெறிகளை யாண்டும் வற்புறுத்தியும்
சிறப்பித்தும் செல்லுகின்றார். மேலும், அவ்வற நெறிகளை விளக்கும்
போதெல்லாம், "நோ�தின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" எனவும், "நுண்ணிதின்
உணர்ந்தோர் கண்டவாறே" எனவும் நினைவுறுத்துகின்றார்.
தொல்காப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய சில இலக்கியங்களிலும்
நூல்களிலும் வைதிக சமயத்தைத் தாயகமாகக் கொண்ட சைவம், வைணவம்,
காபாலிகம், வாமம் போன்ற சமயங்களைக் காண்கிறோம். வைதிக சமயத்திலும்
நான்கு மறைகள், அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர், வேள்வி, இந்திரன்,
ஐயர், இல்லறம் துறவறம் ஆகியவைகள் இருக்கின்றன. இவ்வைதிக சமயத்திற்கும்
தொல்காப்பியத்தில் கண்ட அறநெறிகளுக்கும் பெயரளவில் ஒற்றுமை
இருப்பினும் கொள்கையில் அவை நேர்மாறானவை.
வைதிகம்
தொல்காப்பியத்தில் நாம் கண்ட முதல் நூலாகிய நான்மறைகள் அருளறத்தை
அடிப்படையாகக் கொண்டவை. பொதுமறைகள், வைதிகத்தின் நான்மறைகள்,
அருளறத்திற்கு மாறானவை. ஒரு சார்புடையன. இவ் வுண்மையை நீலகேசி
வேதவாதச் சருக்கத்தில்,
செய்கையும் புதுமையும் உடைமைகளின் திருட்டத்தின் மறுதலையிற்
பொய்யொடும் பொருளொடுஞ் குவகொடுஞ் சாலவும் பொருந்துதலின்
மையுறு மயக்கமும் மாற்றொடு கொலைமன்னு மருவுதலின்
ஐயமில் தீக்கதிச் செலுத்துவ ததுஎன்னையாவதென்றாள் (நீலகேசி 828)
என வாதித்துள்ளார். தொல்காப்பியத்தில் பேசப்பெறும் அந்தணர் முதலானோர்
பிறப்பினால் ஒன்றுபட்டவர்கள்; தொழிலால் வேறுபட்டவர்கள். இங்கே அந்தணர்
அரசராதியோர் பிறப்பினால் வேறுபட்டவர்கள். அதனால் உயர்வு தாழ்வு கொண்டு
அவர்கள் வகுக்கப்பட்டுள்ளனர். அங்கு காணும் வேள்வி கொலையிலாப் பெருநல்
வேள்வி; இங்கே காண்பது கொலை, மது முதலியவைகளைக்கொண்ட வேத வேள்வி.
அங்கே இந்திரன் பேரறிஞன்; ஆயிரம் கண்ணுடையான் ஐந்தவித்துயர்ந்தோரை
அடிபணிந்து போற்றும் பண்புடையவன்; இங்கே இந்திரன் ஒரு காமுகன்,
விபசாரன்; இவ் விழி செயலால் சாபத்திற் காளாகி உடலெல்லாம் சொல்லொணாக்
குறிகளையுடையவன். அந்தணர் அங்கே அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்தோர்;
இங்கே பிறவியால் விளங்கும் ஒருவகுப்பார். அங்கே ஐயர் சான்றோர்கள்;
இங்கே மேலே கூறிய அந்தண வகுப்பார்களின் பட்டப்பெயர். அங்கே இல்லறம்
புனிதமானது (முன்னரே விளக்கியுள்ளோம்); இங்க மனு தர்மசாத்திர வழி
நின்று வாழ்க்கை வளர்ச்சிக்கும் மக்கட்பேற்றுக்கும் எவ்வாறேனும்
நடந்துகொள்ளலாம். அங்கே துறவறம் அருளறத்தின் வழி நின்று முற்றுந்
துறத்தல்; பற்றற்ற நிலை; இங்கே துறவிகள் வேடந்தாங்கி, மக்கள்
மனைவியுடன் காட்டில் வாழ்தல்.
பாரத நாட்டில் அறநெறி எனும் பெயரால் அமைந்திருந்த அமைப்புக்களை
அப்படியே ஏற்றுச் சமயம் என்ற பெயரால் பல்வேறு கொள்கைகளைப் புகுத்தி
நூல்கள் யாத்தது போன்றே, தமிழகத்தில் நிலத்�ற்குரிய தெய்வங்களாக
அந்தந்த நிலத்து மக்கள் வழிபட்டு வந்த மாயோன், முருகன், இந்திரன்,
வருணன் முதலியவைகளுடன் ருத்திரன், கொற்றவை முதலானவைகளையும் தங்கள்
தெய்வங்களாகச் சேர்த்துக்கொண்டார்கள். அது மட்டுமா? அங்கே பாரதம்;
இங்கேயும் பாரதம். அங்கே இராமாயணம்; இங்கேயும் இராமாயணம்! அங்கே
சிவராத்திரி; இங்கேயும் சிவராத்திரி! அங்கே தீபாவளி; இங்கேயும்
தீபாவளி! இவ்வாறே பரத கண்டத்தில் விளங்கிய பல கொள்கைகளையும், பழக்க
வழக்கங்களையும் திருநாள்களையும் தங்கள் வேதச் சார்பினதாகச் செய்து
கொண்டதுமன்றி இவைகளுக்கெல்லாம் இயற்கைக்கும் அறிவிற்கும் பொருந்தாத
பல கற்பனைக் கதைகளையும் புனைந்துகொண்டார்கள். குறிப்பாகச் சிலவற்றை
ஆராய்வோம்.
இவர்கள் நான்கு வேதங்களும் கடவுளால் அருளப்பட்டவை என்பர். வேள்வியில்
கொலை செய்வர்; தெய்வங்களுக்குரிய இலக்கணங்களையே மாற்றிப்
படைவீரர்களாகவும் காமுகர்களாகவும் காட்டுவர்; அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் ஆகிய நான்கு வருணத்தார்களும் பிரம்மாவின் முகம் முதலாகிய
அவயவங்களில் பிறந்தார்கள் என்பர்; அதுமட்டுமல்ல! மிருகங்கள்
வயிற்றிலும், கலசத்திலும், மச்சத்திலும், மானிடர்கள் உதித்துள்ளனர்.
அர்சுனனுக்கு முறைப்படி மாலையிட்டு மனைவியாக வாழ்க்கை நடத்திய
திரெளபதியை உத்தமரான தருமர் முதலானவர்களுக்கும் மனைவியாகக் கற்பித்து
விட்டார்கள். திரெளபதியின் மாமியாராகிய குந்திமாதேவியையும்
சூரியன்,
இந்திரன் முதலானவர்களோடு தொடர்பு கொண்டதாக இயற்கை நகைக்கும் வண்ணம்
செய்துள்ளார்கள். இராமாயணத்திலும் பல முரண்பாடுகள். விஞ்சையர்களாக
விளங்கிய இராவணாதியர்களையும், வாலி, சுக்கி��வன், அனுமான்
முதலானவர்களையும் அரக்கர்களாகவும், குரங்குகளாகவும்
கற்பித்துள்ளார்கள்.
வினையினீங்கி விளங்கிய அறிவனும், உலகுக்கு முதல்நூல் உரைத்தவனுமாகிய
பகவான் விருடபதேவரைத் தங்கள் வேதங்களில் போற்றுவதுமன்றி,
பிற்காலத்தெழுந்த பாகவதம் என்னும் நூலில், பகவான் விருடப தேவரை
மகாவிட்ணுவின் அவதாரமாகச் சிருட்டித்துள்ளார்கள்.1 பகவான் விருடபதேவர்
வீடுபேறு பெற்றத் திருநாளே சிவராத்திரி என வழங்குகிறது. அத்திருநாளை
உருத்திரன் திருநாளாக்கி மயானக்கொள்ளை முதலான கொலை வழியில்
திருப்பிவிட்டார்கள். மகாவீரர் வீடு பேறு பெற்ற திருநாளாகிய தீபாவளியை
இன்று நரகாசூரன் கதையாகக் கூறப்படுகிறது. இவ்வாறே பாரதநாட்டுப்
பழம்பெரும் கொள்கைகளையும், பெயர்களையும், திருநாட்களையும் பிற்கால
வைதிக நூல்களில் ஏற்றிக்கொண்டு தமதாக்கியுள்ளார்கள். எனவே, இவ்விரு
வேறுபாடுகளும் புலவர் பெருமக்களாலும் அறிந்துகொள்ள இயலாமல்,
மயக்கத்தையளிக்கின்றன. இவைகளைப் பகுத்தறிய நுண்ணிதின் அறியும் ஆற்றல்
வேண்டும். அதுமட்டுமல்ல! நேர்மையும் வேண்டும். இத்தகைய மயக்கத்தை
அளிக்கும் வகையில் நூற்கள் மலிந்துவிடவே திருக்குறளாசிரியர் "கற்க
கசடறக் கற்பவை" (391) என்றும், இளங்கோவடிகள் "தெய்வம் தொழுமின்" எனக்
கூறாது "தெய்வம் தெளிமின்" (30:157) என்றும், திருத்தக்கதேவர் "நூனெறி
வகையினோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்பானெறிப் பலவும் நீக்கி,."
(1:345) என்றும் கூறி, புலவர் பெருமக்களையும், ஆராய்ச்சியாளர்களையும்
நூல்களைப் பகுத்தறிந்து மெய்ப்பொருள் காணுமாறு பணித்துள்ளார்கள்.
தொல்காப்பியர் கூறும் முதல்நூல் வழி வந்த அறநெறிகள் அருளறத்தை
அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், அவ்வறங்கள் உலகுக்கே
உரியனவாக
அமைந்துள்ளவை என்பதையும் அறிந்தோம்.
இவ் வுண்மையைப் பரணிக்கோர் செயங்கொண்டானென விதந்தோதப்பெற்ற கவிச்
சக்கரவர்த்தி செயங்கொண்டாரை, அபயன் 'நுமதூர் யாது?' யென்று வினவிய
போது, அவர் சோழ வள நாட்டிலே தீபங்குடியைத் தமதூர் என்று கூறுகையில்,
(தீபங்குடிப்பத்து)
காலைப்பொழுதும் மாலைப் பொழுதும்
கல்விப் பொருளே செல்வப் பொருளாய்
மேலைக்குறுநர் குணனைக் கருதி
மிகு மாதவமே
புரிவார் தமதூர்.
"நிலைசேர் பொருளும், நிலையில் பொருளும்
நிமலன் நெறியால் உலகுக் குரைசெய்
தலையாகிய மாதவர்தாள் நிதமும்
தலைகொண்டிதமே
புரிவார் தமதூர்"
எனத் தமதூரின் சிறப்பையும், அங்கு வதியும் அறவோர்களின் பெருமையையும்,
அவர்கள் உலகுக்குரை செய்யும் அறநெறியை மேற்கொண்டவர்களென்பதையும்,
நன்கு விளக்கியுள்ளார். இதனால் அவ்வற நெறியைச் சமய மென்றோ, மத மென்றோ
கூறவில்லை. சமயக் கணக்கர் மதிவழியில் செல்லாத சான்றோர்களின் அறநெறி
பிற்காலத்தில் சமண சமயம் அல்லது ஜைன சமயம் எனப் பிறரால் அழைக்கப்
பெற்று வருகிறது. இவ்வுண்மையை வலியுறுத்தும் வகையில் திருக்கலம்பக ஆசிரியர்
"சமயவாதிகள் செவியினிலறம்புகச் சாற்றுவன் காணீரே" (திருக்கலம்பகம்,
102) என்றார். எனவே, இவ் வரலாற்றையும் மனதில் கொண்டு இளங்கோவடிகள்
இயற்றியருளிய சிலப்பதிகாரக் காவியச் சோலையில் நுழைந்து உண்மையைக்
காண்போம்.
"குணவாயில் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேர லிளங்கோ வடிகட்கு" (சிலப்பதிகாரம், பதிகம், 1-2)
எனும் வா�களால் இளங்கோவடிகள் வரலாறு நமக்குக் கிடைக்கிறது.