 |
இவ் வுண்மைகளை அறிந்திருந்தும் எல்லாம் கடவுள் செயல் என்ற நம்பிக்கை
பெரும்பாலான மக்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்து கிடக்கின்றது. எல்லாம்
இயற்கை. உலகத் தோற்றங்கள் யாவும் இயற்கையின் முறைப்படியே
இயங்குகின்றன. இன்ன செயலினால் இன்ன பலன் விளையும் என்று அறுதியிட்டுக்
கூறலாம். பேராற்றல் வாய்ந்தவரென்றும், தான் எண்ணியபடியெல்லாம்
செய்யக்கூடியவரென்றும் திருவிளையாடல் பல
புரிபவரென்றும், கடவுளைப்
பற்றிக் கூறப்படுகிறது. அவ்வாறாயின் கிழக்கே உதிக்கும்
சூரியனை மேற்கே
உதிக்கச் செய்வாரா? பதினைந்து நாட்களுக்கொருமுறை தேய்ந்தும்
வளர்ந்தும் வரும் சந்திரனை ஒரு மாதமாகிலும் அச்செயலிலிருந்து
மாற்றுவாரா? ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பவை
இயற்கை. இந்த விதியை எவரும் மறுக்க முடியாது. மனிதனுக்கும் அவ்வாறே
பிறப்பு இறப்பு உண்டு. கடவுள் எதையும் ஆக்கவோ அழிக்கவோ வல்ல பேராற்றல்
படைத்தவரானால் ஏன் இவ்வுலக உயிர்களெல்லாம் மாய்ந்து மடிகின்றன? உலகந்
தோன்றிய போது தோன்றியவர்கள் இன்று ஏன் இல்லை? எனும் வினாக்களுக்குப்
பதில் கூறவியலாது, பாவிகளை வேண்டுமானால் அழித்து விடட்டும். பக்தர்களை
ஏன் உயிரோடு உலகுக்கு அறிமுகப்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல; அத்தகைய
கடவுள் பக்தர்கள் படாதபாடுபட்டுத் துன்புற்றிருக்கின்றார்கள். தங்கள்
வாழ்க்கை நலனைக்கோரியோ துன்ப நிலையை விளக்கியோ கடவுளிடம் முறையிட்டு
ஏதாகிலும் வெற்றி கண்டார்களா என்றால், அதுவுமில்லை. அவ்வாறு
அச்சத்தாலோ ஆசையாலோ கடவுளை வழிபடுவது முறையுமல்ல; அறிவுடைமையுமல்ல.
"வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல் பாழ்பட்ட தெய்வ மயக்கு" (அருங்கலச்செப்பு,
3) என அருங்கலச் செப்பும் அறிவுறுத்துகின்றது. எனவே, இத்தகைய
சூழ்நிலையை உண்டாக்காமல் மக்களின் அறிவையும் ஒழுக்கத்தையும்
வளர்க்கவேண்டி, ஜைன சமயம் இயற்கையின் பாற்பட்ட உண்மையை உலகுக்கு
அறிவித்துள்ளது. இவ்வுலகம் எவராலும் படைக்கப்படவில்லை. ஆதியும்
அந்தமும் அற்றது. இவ்வுலகில் நிகழும் இன்ப துன்பங்களுக்குக் காரணம்
கடவுளல்ல எனும் உண்மையை அளித்துள்ளது. இவ்வுலகில் நம்மைப்போல் தாய்
தந்தையர் வயிற்றில் பிறந்து வளர்ந்து மக்கள் நலத்திற்காக அரும் பெரும்
சேவைகளைச் செய்து மன்னுயிர் அனைத்திற்கும் அரணாக விளங்கும் அறநெறிகளை
வகுத்தருளிய கடையிலா ஞானத்தைப் பெற்றவரையே கடவுளெனப் போற்றுகின்றது
ஜைன சமயம். அதுமட்டுமல்ல; அத்தூயோரும் தவத்தாலும் ஒழுக்கத்தாலும்
உயர்ந்தோராகி, நிறைந்த அறிவு நிலை பெற்று, இரு வினைகளினின்றும் நீங்கி,
வீடுபேறும் பெற்றவராதல் வேண்டும். அவரே உலகுக்கு இறைவன் என்றும்
போற்றுகிறது.
"நல்லார் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர்தீர்த்து உயா�ன்பமாக்குஞ்
சொல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி" (நீலகேசி, 1)
எனும் நீலகேசிக் கடவுள் வாழ்த்தாலும் அறியலாம். சூடாமணி நிகண்டு ஆசிரியரும்
உலகுக்கு இறைவன் யார் என்பதை
"கடையிலா ஞானத்தோடு காட்சி
வீரியமே இன்பம்
இடையுறு நாம மின்மை விதித்த கோத்திரங் களின்மை
அடைவிலா வாயுவின்மை அந்தராயங்க ளின்மை
உடையவன் யாவன் மற்றிவ் வுலகினுக் கிறைவனாமே" (சூடாமணி நிகண்டு, 12;
86)
என்றும், அருங்கலச் செப்பு ஆசிரியர், (அருங்கலச் செப்பு 5, 6, 7)
"குங்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை
பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றார்வஞ் செற்றங்
கசிவினோ டில்லா னிறை
கடையி லறிவின்பம்
வீரியங் காட்சி
உடையா னுலகுக்கு இறை"
என்றும், கடவுள் தத்துவங்களைக விளக்கியுள்ளார்கள். இத்தகைய சிறந்த
குணங்களையும் ஞானத்தையும் பெற்றவன் எவனோ அவனே உலகுக்கு இறைவன் எனத்
தெளிதல் வேண்டும். இக் கடையிலா ஞானமே கேவல ஞானம் என்றும் முழுதுணர்
ஞானம் என்றும் வாலறிவு என்றும் போற்றப்படுகிறது. இப்பேரறிவைப்
பெற்றவர்கள் உலகை ஒருங்கே காண்பார்கள். அதனாற்றான் அத் தூயோர்களை
முழுதுணர்ந்தோர் என இலக்கியங்கள் போற்றுகின்றன. திருக்கலம்பக ஆசிரியர்,
"அம்மானை முடிவிலா ஞானந் தன்னால்
அளவிலாப் பொருள் முழுதும் பரந்து நின்ற
பெம்மானை யுலகளவு நிறைந்த சோதிப்
பெருமானை யறியாதே பெருமால் கொண்டிங்
கிம்மான நிலனாகித் தீயாய்க் காலா
யிருசுடரா யொ�புனலாய் வானாய் மற்றும்
எம்மானெவ் வுயிர்களுமாய் நின்றா னென்றே
யியம்பு வார்துணி வென்னே யிருந்த வாறே" (திருக்கலம்பகம், 28)
என அழகாக அறிவித்துள்ளார். இவ்வுண்மையை உலகம் ஆராய்ந்தறியவே
இளங்கோவடிகள் தமது காவியத்தில் நாட்டில் நிலவும் பற்பல தெய்வங்களையும்
அவைகளின் உருவங்களையும் குணங்களையும் செயல்களையும் அந்தந்த சமயத்தவர்
வாயிலாகவே வெளியிட்டு, கடைசியாக "தெய்வந் தெளிமின்" எனக் கூறி, நமது
அறிவிற்கு விட்டுவிட்டார். இனி நமது அறிவின் ஆற்றலால் எது கடவுள்
என்பதை அளந்தறிந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆராயின், அருகக் கடவுளே
இறைவன் என்பது தெளிவாகும்.
தமிழகத்தில் சிறந்த அறிஞராகவும், தர்க்க நிபுணராகவும் விளங்கிய
அகளங்க முனிவர்,
"யோவிஸ்வம் வேத வேத்யம் ஜனன ஜல நிதே:
பங்கின பாரத் ரஸ்வா
பெளர் வாபர்யா விருத்தம் வசன மனுபமம்
நிஷ்களங்கம் யதீயம்
தம் வந்தே சாது வந்தியம் சகல குணநிதிம்
த்வஸ்த தோஷத் விஷந்தம்
புத்தம் வா வர்த்தமானம் சததள நிலையம் கேசவம வா சிவம் வா"
எனப் போற்றியுள்ளார். இதனால் 'காமம் வெகுளி மயக்கம் நீங்கிக் கடையிலா
ஞானம் ஆகிய எண்குணங்களைப் பெற்று விளங்குபவன், புத்தனாயினும்,
அருகனாயினும், சிவனாயினும், திருமாலாயினும் அவனையே இறைவனாக
வணங்குகின்றேன்' என்றார். திருக்குறளிலே காணும் கடவுள் வாழ்த்துப்
பத்தும் மேலேகூறிய குணங்களையுடைய அருகனையே குறிக்கும் என்பதை அறியலாம்.
ஆதிபகவன் என்பவரே யாம் இதுவரை கூறிவந்த தலைவரும், முனிவரும், இறைவரும்
ஆவார். அவருடைய இயற்பெயர் பகவான் விருடபதேவர் என்பதை முன்னரே
அறிந்துள்ளோம். இளங்கோவடிகள் கண்ட கடவுளுண்மையை நாமும் நமது அறிவால்
ஆராய்ந்து தெளிவோம், போற்றுவோம்.
இவ்வாறு ஜைன அறவோர்கள் வகுத்தருளிய நற்காட்சியென்னும் பகுத்தறிவினை
வலியுறுத்திப் பேசும் நமது இளங்கோவடிகள் ஜைன அறவோரேயாவர். மேலும்
இளங்கோவடிகள் தமது காவியத்தின் இறுதியில் உரைக்கும் அறவுரைகளில்,
"அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்" (சிலப்பதிகாரம்,
3:30:193-194)ச்
என்னும் அறிவுரையிலே அவரது உள்ளக் கிடக்கையை அறியலாம். சிலப்பதிகாரக்
காவியத்தில், அறமுரைப் போராக வருவோரெல்லாம் ஜைன சமயச் சான்றோர்களும்
முனிவர்களுமேயாவார்கள். எனவே, உலக மக்களைப் பார்த்து, 'அறவோரவைக்களம்
அகலாதணுகுமின்' என இளங்கோவடிகள் கூறும் பொருளால் அவர் தமது சமயப்பற்றை
வெளிப்படுத்துகின்றார்.
சேரநாட்டுப் பண்டைய வரலாற்றாலும் சேரநாடு முழுமையும் ஜைன சமயம்
பரவியிருந்தமை விளங்கும். நாகர்கோயில், சித்ரால்மலை, திருச்சரணம்
போன்ற பல விடங்களில் காணும் சின்னங்களாலும், பூமிக்குள்ளேயும்
வெளியேயும் சிதறிக்கிடக்கின்ற தொல்பொருள்களாலும், கல்வெட்டுச்
செய்திகளாலும், கோயில்களாலும், குகைகளாலும் இவ்வுண்மை விளங்கும். 'இந்தியாவில்
ஏதாவது ஓர் இடத்தைக் கொண்டு, பத்துமைல் நீளமுடைய ஒரு வட்டத்தை
வரைந்தால் அந்த வட்டத்திற்குள் நிச்சயமாக ஜைன சின்னங்கள் கிடைக்கும்'
என கானந்த மாசிக் எனும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், தமது நூலில்
வரைந்துள்ளார். எனவே, சேரநாட்டிலும் அவ்வாறே கிடைக்கக் காண்கின்றோம்.
பம்பாய் உயர்தர நீதிமன்ற நீதிபதி
ரிங்லேகரின்:
'உண்மையில் பிராமண தருமம் ஹிந்து தர்மமாக மாறுவதற்கு முன்னரே ஜைன
தர்மம் இதே தேசத்தில் இருந்ததென்று தற்கால வரலாற்று ஆராய்ச்சியினால்
விளங்குகிறது' ஆய்வுரை நமது கருத்திற்கு அரண் செய்வதாகும். இத்தகைய
வரலாறுகளைக் கொண்டு நடுநி�மையினின்றும் வழுவாது ஆராயின் பாரதநாட்டின்
பழம்பெரும் சமயம் ஜைனம் என்பதும் அச்சமயத்தைச் சார்ந்தவர்களே
சேரநாட்டு மன்னர் பரம்பரை என்பதும் நன்கு விளங்கும்.
இளங்கோவடிகள் ஜைன அறவோராகையால் தமது இளம் வயதிலிருந்தே சமயக்
கொள்கையில் பொ�தும் ஈடுபட்டு வந்தார். ஜைனம், அறம்பொருள் இன்பம்
வீடென்னும் அடிப்படையில் நரக கதி, விலங்கு கதி, மனித கதி, தேவ கதி
ஆகிய நான்கு கதிகளையும், இல்லறம், துறவறம் ஆகிய இரண்டு
பிரிவுகளையும்
கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை மிகுபொருள் விரும்பாமை
ஆகிய பஞ்ச சீலங்களையும் கொண்டு விளங்குகிறது. பெளத்த மதத்திலும்
ஏறக்குறைய இவ்வாறு காணலாம். மற்ற சமயங்களுக்கு முதல் நூலோ, நல்ல
அறங்களைப் போதிக்கும் வழி நூல்களோ, நீதி நூல்களோ, தத்துவ சாத்திரங்களோ,
இல்லறம் துறவறம் என்ற பாகுபாடுகளோ இருந்ததாகக் காட்ட
சிலப்பதிகாரத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. சைவமும், வைணவமும், சங்கரர்,
இராமானுஜர் காலத்தில்தான் தோன்றியதாகத் தொ�கிறது. கி.பி. ஆறு ஏழு
நூற்றாண்டுகளுக்குப் பின்புதான் சமண பெளத்த நூல்களைப் பயின்று
அக்கருத்துக்களைக் கொண்டே இரண்டொரு மாறுதல்களோடு தங்கள்
சமயங்களுக்கும் சில நூல்களை உண்டாக்கினார்கள் என்பதற்கு அவர்கள்
நூல்களே சான்றாக நிற்கின்றன. இவ்வரலாற்றுண்மையை யசோதர காவிய மூலத்தை
முதன் முதல் பதிப்பித்த பேராசிரியர் தில்லையம்பூர் உயர்திரு.
வெங்கட்ராம அய்யங்கார் அவர்கள் அப்பதிப்புரையில் பின்வருமாறு
எழுதியுள்ளார் :
"ஜைனர்கள் போட்ட அடிப்படையை வைத்துக்கொண்டே பின்னாளில் சைவர்,
வைஷ்ணவர் முதலியோர் தங்கள் மசயக் கோட்பாடுகளைச் சீராக்கினார்கள்.
வடமொழி, தென்மொழி என்னும் இரண்டு பாஷைகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச்
சீராக்கி, பத்திய நடையையும், கத்திய நடையையும், இவ்விரு பாஷைகளின்
சேர்க்கையாலும், மணிப்பவள நடையையும், அமிழ்தினும் இனிய சுவையையும்
ஆழ்ந்த கருத்தும், தெளிவும், தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும்
மேன்மையுடையதாக்கி, அவைகளிற் பல காவியங்களையும், நீதி நூல்களையும்
செய்து என்றும் ஒளி மழுங்காத போ�சை பெற்று விளங்குபவர் ஜைனர்களே யாம்.
இன்றும் தென்னாட்டில் வழங்கும் நிகண்டுகளும், நெடுங்கணக்கும்,
நெல்லிலக்கம், எண்சுவடி, நீதிசாரம் முதலியனவும் இவர்கள் செய்து
வைத்தவைகளேயாகும். இவர்கள் உன்னத நிலையிலோங்கிய காலத்தேற்பட்ட
காவியங்கள், முதலிய பல நூல்களின் இனிய நடைபோன்ற நடை பிற்காலத்தவர்
செய்த நூல்களில் இன்றுவரை காணப்படவில்லை. பெருங் காவியங்களில் ஐந்தும்,
சிறு காவியங்கள் ஐந்தையும் தென்றமிழ் நாட்டில் என்றும் விளங்கும்
பெருந்தனமாகப் பாடியளித்தவர் அச்சமயத்தவரே.
ஆதிகாலந் தொடங்கி மனிதர்கள் முறைமுறையாய் நடை, உடை, பாவனைகளில் சீராய்
வருவதுபோலவே பாஷைகளும் நாளேற நாளேறச் சீரடைதல் உண்மையாயினும் ஜைனர்கள்
உன்னத பதம் நீங்கித் தாழ்ந்த நிலை நேர்ந்து நெடுங்காலமாகியும்,
அவர்களின் உன்னத காலத்தில் அமைந்துள்ள பல நூல்களின் இனிய நடைபோன்ற
நடையுள்ள நூல்கள் இந்நாள் அளவும் தலை நீட்டாமையே ஜைனர்களின் பாஷா
வல்லமைக்குப் போந்த நிதர்சனமாகிறது.
கலைமகளாம் பெண்ணரசியை அன்போடு அவர்கள் வளர்த்து எழில் உண்டாக்கி,
அணிகளையும் அணிவித்து, அவ்வழகையும், அணிகளையும் இனிது விளங்கச்
செய்யும் இருகலைகளாம் வெண்பட்டாடை, செம்பாட்டாடை போன்ற வடமொழி,
தென்மொழி இரண்டு கலைகளினுடைய கண்கவறும் எழிலும், நயமும், காந்தியும்,
அகலமும் நீளமும் இத்தென்றமிழ் நாட்டார் என்றைக்கும் நினைக்கவும்,
போற்றவும் உரியவையாம். கலைமகளின் ஒருகலை, போஜன், காளிதாசன் இவர்கள்
நாளில், அதாவது கி.பி.11-ஆம் நூற்றாண்டில், ஒருவாறு மேன்மை
பெற்றோங்கியிருப்பினும், அதற்கு முன்பாகவே கலைகமளின் இருகலைகளாம்
வடமொழி, தென்மொழிகளை எழில் பெறச் செய்யதோர் ஜைனர்களே."