 |
பழைமையும் அமைதியும் புனிதமும் நிறைந்த அம்மலைகள், முற்றும் துறந்த
முனிபுங்கவர்கள் தவம் புரிய தம்மகத்தே வருவார்கள் என அறிந்து குகைகளை
அமைத்துக்கொண்டிருப்பன போன்று இயற்கையாக விளங்கும் அப்புண்ணியப்
பள்ளிகளில் பெரும்பாலானவற்றை யானும், அறிஞர் திரு. மயிலை சீனி.
வெங்கடசாமி அவர்களும், பழம்பொருள் ஆராய்ச்சித் துறை அறிஞர் திரு.
சதாசிவ பண்டாரத்தார் அவர்களும், எழுத்தாளர் திரு. ஊ. ஜெயராமன்
அவர்களும், ஈரோடு புலவர் திரு. சே. இராசு அவர்களும், பண்டிட் திரு.
இராம. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, M.A.F.S., அவர்களும், கல்கத்தா
சோட்டேலால் ஜெயின் அவர்களும் நேரே சென்று ஆங்காங்குள்ள அரிய காட்சிகளை
எல்லாம் கண்டு மெய்மறந்து நின்றுவிட்டோம். உள்ளத்தெழுந்த உணர்ச்சி
மிகுதியால் அப்பள்ளிகளில் காணும் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளை
வணங்கி வழிபட்டோம். செயற்கைக் கோவில்களில் வழிபாடியற்றிவரும் நாம்
இயற்கைக் கோவில்களில் வழிபடும் பாக்கியத்தைப் பெற்றோமே எனப்
பூரிப்படைந்தோம்.
வணக்கத்திற்குரிய நீத்தார் பலா�ன் பெருமையை அறிந்ததோடு
அப்புனிதர்களின் திருவடிகள் பதிந்த மண்ணில் வருவதற்கு நாம் என்ன
புண்ணியம் செய்தோமோ என எண்ணி எண்ணி உவகை மேலிட்டோம். அதுமட்டுமல்ல!
அளப்பரும் ஞானிகளின் திருப்பதிகளாய் அமைந்ததனாலன்றோ அசைவற்றப்
பொருள்களாகிய இம்மலைகள் அளப்பரும் மாட்சிமையோடு வரலாற்றுச்
சிறப்பையும் படைத்துக்கொண்டன என அப்புனித மலைகளைப் புகழ்ந்தோம்.
இப்பெற்றிய சிறப்பமைந்த தொல்பொருள் காட்சிகள் இரஷ்யாவிலோ, அமொ�க்காவிலோ
அன்றிப் பிற மேலை நாடுகளிலோ காணப்படுமாயின், இவ்வாறு கேட்பாரற்றுப்
பாதுகாப்பின்றி கிடக்குமா என வருந்தினோம். திரு. ஊ. ஜெயராமன் அவர்கள்
இப்பண்டையச் சின்னங்களை உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் அறிய
வொட்டாமல் வைத்திருப்பதற்குக் காரணம் மதக் காழ்ப்பு எனில் மிகையாகாது
என்றார். திரு. செ. இராசு அவர்கள் "ஆங்கில ஆட்சியில் இருந்த பழம்
பொருள் ஆராய்ச்சி அறிஞர்களாகிய ஆங்கில நிபுணர்களின் உணர்ச்சியும்
ஆர்வமுமே இன்று இக்காட்சிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது" எனத்
தழுதழுத்த குரலில் கூறினார். நாங்கள் அது உண்மையே எனக் கூறி இன்று
புதைபொருள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றும் அறிஞர்களில் நேர்மையைக்
கடைப்பிடிப்போர் சிலராயினும் இருப்பதனால் தான் அங்கும் இங்கும் சில
செய்திகள் காணப்படுகின்றன என்றோம். உடனே திரு. மயிலை சீனி வேங்கடசாமி
அவர்கள் என்னைப் பார்த்து, தாங்கள் 'சமணர்மலை செல்வோம்' என்ற நூலை
வெளியிட்ட பின்னரே சிலருக்கு ஜைன சமயப் பழம்பொருள் செல்வங்களை
ஆராயவும், வெளியிடவும் உணர்வு தோன்றியதெனில் மிகைப்படக் கூறுவதன்று.
மேலும் அச்சமணர் மலையில் ஆச்சான் ஸ்ரீபாலன் என்ற முனிவா�ன் பெயர்
பொறித்தக் கல்வெட்டுச் செய்தியைக் கண்டது போன்று, இன்று நம்மை எல்லாம்
மற்ற ஜினர்மலைகளில் வீற்றிருந்து தவம்
புரிந்த அறவோர்களின் பெயர்களைக்
கொண்ட கல்வெட்டுச் செய்திகளைக் காண வாய்ப்பளித்து வருபவர் ஒரு
ஜீவபந்து ஸ்ரீபாலராக அமைந்தது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது
அல்லவா" என்றார். இத்தகு மாண்பமைந்த சில மலைகளில், மேலே செல்வது
சிரமமாகவேயிருக்கிறது. வழவழப்பான பாறைகளும், மேடு பள்ளங்களும்,
சிறுசிறு கற்களும் செங்குத்தான பகுதிகளும் நிறைந்திருப்பதால் மலையின்
உச்சிக்குச் செல்வதற்குள் அயர்வு தோன்றிவிடுகிறது. குகைப்பள்ளிகளை
அணுகியதும் அங்குள்ள அரும் பெரும் காட்சிகள் களைப்பைக்
களைந்துவிடுகின்றன. மகிழ்ச்சிப் பொங்கி எழுகிறது. உள்ளம் குளிர்ந்து
உவகை மேலிடுகிறது.
தத்துவ மேதைகள், வாதவல்லுனர், நான்மறை முற்றிய நற்றவத்தோர், பொய்யா
மரபினர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், செற்றம் நீங்கிய
மனத்தினர், செம்பொருள் காணும் செவ்விய சமணர்கள், ஊழையும் உட்பக்கம்
காணும் உறுவர், ஆகிய இம்மாமுனிவர்களின் அருங்குணங்களைப் போற்றி
அப்புனிதர்களின் பொற்பாத கமலங்களை உள்ளத்தால் நினைந்து வணங்கினோம்.
பட்டினி நோன்பை மேற்கொண்ட இம் முனிபுங்கவர்கள் இவ்வுயா�ய
மலைகளினின்றும் எவ்வாறு ஏறி இறங்கினார்களோ என எண்ணி வியப்புற்றோம்.
தவத்தின் மாண்பே மாண்பு! எனப் போற்றிப் புகழ்ந்தோம். அதுமட்டுமல்ல!
நாம் முன்னர் கூறிய சாரண பரமேட்டிகள் பிண்டி நீழற் பெருமானால்
செய்யப்பெற்ற சகசாதிசயம், கர்ம க்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம் ஆகிய
மூன்று அதிசயங்களும் தப்பாத ஆகம நூலுண்மைத் தன்மையையுடைய தரும
ஒழுக்கத்தை யாவரும் கேட்கும்படி அருளிச் செய்ய ஆற்றலால்
இம்மலைகளினின்றும் இறங்கி இருக்கலாமோ என ஐயுற்றோம். இவ்வாறெல்லாம்
வியப்புற்று ஏதோ வானுலகினின்றும் பூவுலகிற்கு வருவது போன்ற உணர்வுடன்
கீழே இறங்குகையில் அயர்வே தோன்றவில்லை. மலை அடிவாரத்தில் வந்ததும்
மற்றொரு மலையிலும் ஏறிச்சென்று அங்குள்ள அரிய காட்சிகளையும்
காணவேண்டும் என ஆர்வம் மேலிடுகிறது. ஆர்வம் முன்னர் கண்ட அயர்வின்
அச்சத்தை மறக்கச் செய்கிறது.
அறநெறி பிழையாது, அன்பும், அடக்கமும், அருள் செறிந்த உள்ளமும்
உடையவர்களாய் இலக்கியங்களும், இலக்கணங்களும், நீதி நூல்களும்
படைத்தருளிய அறவோர் பள்ளிகள் எங்கள் உள்ளங்களை எவ்வாறு ஆட்கொண்டு
இன்புறச் செய்தனவோ அவ்வாறே தமிழக மக்களும், குறிப்பாக ஜைனப்
பெருமக்களும் அவ்வின்பத்தை நுகரச் சுற்றுலா புறப்படவேண்டும் என்ற
அவாவினால் இவ்வரலாற்றுக் கட்டுரையை வரையலானேன்.
அதுமட்டுமல்ல!இப்புண்ணிய மலைகள் யாவும் கேட்பாரற்றுக்
கிடக்கின்றனவாகையால் புதைபொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், கல்வெட்டு
ஆராய்ச்சித்திறம் படைத்தோரும் பாராமுகமாயிராமல் தமிழகத்தின் பண்டைய
வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்ய முனைய வேண்டும் என்ற வேண்டுகோள்
முறையிலேயே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். மத்திய அரசும், மாநில அரசும்
இவ்வரலாற்றுப் பெருமலைகளைப் பாதுகாக்கவும், திரைப்படங்களாக எடுத்து
செய்தித்துறை வாயிலாக மக்கள் மகிழ திரையிடவேண்டும் என்றும்
வேண்டிக்கொள்கின்றேன்.
அன்பர்களே! இதுவரை ஜினர் மலைக் கட்டுரையை ஆழ்ந்து வாசித்தறிந்த உங்கள்
யாவருக்கும் இக்கட்டுரை புதைபொருள் விருந்தாகி வியப்பூட்டு என்பதில்
ஐயமில்லை. உள்ளத்தைக் கிளர்த்தெழும் பற்பல எண்ணங்கள் தோன்றும்.
பன்னெடும் நூற்றாண்டுகளாக நம் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பைத்
தம்மகத்தே தாங்கி இன்றுவரை அழியாச் செல்வங்களாகக் காட்சி அளிக்கும்
இப்பெருமலைகளைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கம் உண்டாகும்.
ஆ! ஆ! அவை வெறும் மலைகளா! குன்றுகளா! இல்லை! இல்லை! பல்கலைக்கழகங்கள்
அருந்தவப் பள்ளிகள்! புனிதர்கள் வாழ்ந்த புண்ணியத் தலங்கள்! மக்கள்
பண்பாட்டின் பண்டக சாலைகள்! உள்ளத்தை உயர்விக்கும் உன்னத ஊற்றுக்கள்!
அறிவொளி வீசும் அறநெறி மண்டபங்கள்! சாதி! சமய பேதமின்றி மக்கள்
பலருக்கும் மதியளித்த மாமலைகள்! தமிழ் மொழியும் வடமொழியும் நடம்புரிந்த
கலைச்சோலைகள்! தமிழகத்தின் தனிச்சிறப்பைக் காட்டும் புகழ்பொதிந்த
பொன்மலைகள். அவைமட்டுமன்று மூட நம்பிக்கைகளை முறியடிக்கும்
பகுத்தறிவுப் படைகளின் பாசறைகள்! மன்னர்கள், சான்றோர்கள், அறிஞர்கள்,
புலவர்கள், கவிஞர்கள், செல்வர்கள், ஏழைகள் ஆகிய பலரையும் தம்மகத்தே
ஈர்த்த இலக்கியக் கூடங்கள்! எனப்போற்றிப் புகழ உள்ளம் விழையும். இன்றே
இப்பெருமலைகளின் காட்சிகளைக் காணச் சுற்றுலா புறப்படவேண்டும் என்ற
உணர்வு பிறக்கும். உணர்வு மட்டுமல்ல கடமை, கடமை எனச் சிந்தனையைத்
தூண்டும். எனவே உங்கள் பேரவாவை வெற்றிபெறச் செய்ய அக்கலைக்
களங்சியங்களாகிய அறவோர் பள்ளிகள் அமைந்திருக்கும் மலைகளின்
உறைவிடங்களை மாவட்டவாரியாக கீழேதந்துள்ளேன். சுற்றுலா சென்று
கண்டுகளியுங்கள்! கீழே குறிப்பிட்டுள்ள மலைகள் தவிர வேறு இத்தகு
வரலாற்று மலைகள் நிறைய இருக்கின்றன. அவைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.
கண்டறிந்தவற்றை நல்லற இதழுக்கு எழுதி அனுப்புமாறு வேண்டுகிறேன்.
'தேவ சாஸ்திர குருவே சரணம்'.
தமிழகத்து ஜினர் மலைகள்
மதுரை மாவட்டம்
1. திருப்பரங்குன்றம்
2. சமணர் மலை
3. ஆந்தை மலை
4. கொங்கற் புளியங்குளம்
5. உத்தமபாளையம்
6. நாகமலை
7. அணைப்பட்டி
8. ஐவர்மலை
9. மாங்குள மலை
- அரிட்டாபட்டி
10. விக்கிர மங்கலம்
11. வா�க்கையூர்
12. ஆனை மலை
13. அழகர் மலை
14. மேட்டுப்பட்டி மலை (சித்தர் மலை)
15. முத்துப்பட்டி மலை
16. கீழவளவு