 |
இவ்வுண்மையை ஆங்காங்குள்ள மலைப் பள்ளிகளில் பொறிக்கப்பெற்றுள்ளக்
கல்வெட்டுச் செய்திகள் அத்தூய முனிவர்களின் பெயர்களோடு அஷ்டோபவாசி,
மாசோபவாசி எனக் கலங்கரை விளக்கம் போன்று பொலிவு பெற்று விளங்குகின்றன.
எவ்வுயிர்க்கும் செந்தண்மைப் பூண்டொழுகும் அறவோர்களாகிய இவ்வந்தணர்கள்
பட்டினி விரதமாகிய கடுநோன்பில் வெற்றி பெற்று விளங்கியது தவத்தின்
மகிமையேயாகும். பட்டினி விரதத்தால் சிந்தனா சக்தியும், அறிவாற்றலும்
பெருகும். உலகியல் துன்பங்கள் சிறிதும் அணுகா.
அதனாற்றான் அத்தூய தவத்தவர்கள் ஆதி காலத்திலிருந்தே மலைக் குகைகளைத்
தவத்திற்கு உரிய இடமாகத் தேர்ந்தெடுத்தனர். அறிவியல் துறையில்
ஆராய்ந்தால் மலைக்குகைகள் பட்டினி நோன்புடையாருக்கு உற்ற துணையானவை
என்பது புலனாகும்.
மலைகளின் உச்சியில் அமைந்துள்ள இயற்கைக் குகைகளில் இடைவிடாது காற்று
வீசிக்கொண்டே இருக்கும். அக்காற்று சுத்தக் காற்றாகவும், குளிர்
காற்றாகவும் அடிக்கும். இத்தூய பிராண வாயுவை சுவாசித்தால் பசியே
எடுக்காது. தண்ணீர் தாகமும் அணுகாது. சுகாதார சூழ்நிலையால் உடல்
நலமுற்றிருக்கும். பிணியின் வழி அடைக்கப்படும். அகமகிழ்வையும்,
ஒளிவீசும் தோற்றத்தையும் அளிக்கும். இவ்வியற்கையின் இயல்பை அறிவியலில்
(விஞ்ஞானம்) துறை போய அம்முனிபுங்கவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
இக்கால விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சியின் வாயிலாக இக்கொள்கையை
வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யநாட்டு உணவுத்துறை ஆராய்ச்சி வல்லுனர் டாக்டர் பார்பராமூர் என்ற
பெருமாட்டியார் காய்கனிகளையே புசிப்பவர். அவர் லண்டன் வானொலியில்
பத்து ஆண்டுகளுக்கு முன் உரையாற்றியபோது காய்கனிகளையும்,
பழரசங்களையும் புசித்தே திடகாத்திரமாக அயர்வின்றி வாழலாமெனக் கூறி,
மலையின் மேல் வசித்தால் காற்றைக் புசித்தே நெடுநாட்கள் பசியின்றி
வாழலா மென்றும் கூறினார். இவ்விஞ்ஞான அற்புதத்தை நமது ஜைன முனிவர்கள்
என்றோ அறிந்திருந்தனர் என்பதை அறியுங்கால் அவ்அறவோர்கள் தவம் புரிந்த
மலைகளின் திசைகளை நோக்கி அத்தவத்தரை வணங்கி வழிபட நம் உள்ளங்களில்
ஆர்வம் பொங்கி எழுந்து, நம்கரங்கள் நம்மை அறியாமலே தலைக்குமேல்
குவிகின்றன. வியக்கத்தக்க அறிவாற்றலைப் பெற்ற அம்முனிபுங்கவர்களின்
தவப்பள்ளிக்கு அக்கால மன்னர்களும், தேவியர்களும், அறிஞர்களும்,
பொதுமக்களும் சென்று அப்புனித மூர்த்திகளை வணங்கி அறவுரைக்கேட்டு
இன்புற்றிருந்தனர். கற்றறிந்தோர் பலர் அம்முனிவர்கள் பால் சென்று
இலக்கியங்கள், தத்துவங்கள், சாத்திரங்கள் ஆகிய பலவற்றைப் பயின்று
மூதறிவைப் பெற்று வந்தனர். இவ் அரிய காட்சிகள் தமிழக மலைப் பள்ளிகளில்
தினசா� நடந்துவந்தன.
இலக்கியக் காட்சி
ஜைன முனிவர்கள் பல குன்றுகளிலே தவமியற்றி அறநெறி பரப்பி வந்தார்கள்
என்பதைச் சங்க இலக்கியமாகிய மதுரைக் காஞ்சியிலும், பெருந்தொகை
நூலிலும் கண்டோம். மன்னர்களும் மக்களும் அறவுரைகேட்டு
இன்புற்றார்களெனும் வரலாற்றுண்மையை இலக்கியங்களிலே காண்போம்.
தமிழ்க் காவியங்களில் தலைசிறந்த காவியமெனப் புலவர் பெருமக்களால்
போற்றப்பெறும் சீவகசிந்தாமணியின் காவியத் தலைவன் சீவக நம்பி, சுதஞ்சண
தேவரை நோக்கித்தாம் பல நாடுகளையும், இயற்கை வளங்களையும் காண
விழைவதால்தான் புறப்பட்டுப் போக விடை கேட்கின்றான். அப்பொழுது
சுதஞ்சணதேவன் ஜீவக நம்பியை பூமியில் விடுத்து போகும் வழிகளிலுள்ளப்
பலக் காட்சிகளை விளக்கிக்கூறும் போது ஜைன முனிவர்கள் தவம் புரியும்
அரணபாதம் எனும் மலையையும், வனகிரி எனும் மலையையும், குறிப்பிட்டு
அம்மலைகளில் தவம் புரியும் முனிவர்களின் தவ மாண்பினைப் போற்றிக்
கூறும் கவிகளில்,
"இம்மலைக்கிரண்டு காத மிறந்த பினிருண்டு தோன்றும்
அம்மலையரண பாதமென்பதன் தாள் வாய்த் தோன்றும்
தம் வினை கழுவுகின்றார் சாரணர் தரணி காவல்
வெண்மையினகன்று போந்துவிழைவறத் துறந்து விட்டார்"
என அரணபாத மலையின் மாண்பினையும், அதன் பின்னர்,
"இலைப் பொலி பூண்முலை யொ�பொன் மேகலைக்
குலத்தலை மகளிர்தங் கற்பிற்திண்ணிய
அலைத்துவீ ழருவிகளார்க்குஞ் சோலைசூழ்
வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே"
"கா�யவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப்
பொ�யவன் திருமொழி பிறழ்தலின்றியே
மா�யவருறைதலின் மதனகீதமே
திரிதரப் பிறந்தோர் சிலம்பிற் றென்பவே"
என வனகிரி மலையின் பெருமையையும், தேவர் பெருந்தகைப்
படம்பிடித்துக்காட்டியுள்ளார். சுதஞ்சனதேவன் கூறியவாறு ஜீவகநம்பி
சென்று அரணபாத மலையை அடைந்து அங்கு தவம் புரியும் முனிவர்களின்
திருவடிகளை வணங்கிச் சென்ற காட்சியை,
"அந்தரவகடு தொட்டணவுநீள் புகழ்
வெந்தொ� யசும்பொனின் விழையும் வெல்லொளி
மந்திர வாய்மொழி மறுவின் மாதவ
ரிந்திரர்தொழு மடியினிதினெய்தினான்"
என விளக்கிக் காட்டியுள்ளார் தேவர் பெருமான்.
மற்றொரு சிறந்த காவியமாகிய மேருமந்தர புராணத்தில் வரும் வைஜயந்த
மன்னர் துறவற மேற்றுப் பண்ணவர் படிமந்தாங்கி (நிர்வாண நிலை) உள்ளத்தை
ஒருவழி நிறுத்தித் தூய தவத்தினைப் புரிய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்துச்
செல்கிறார்.
இவ் அரிய காட்சியை,
"ஆங்கவரங்க பூவமாதி நூலோதி யார்க்குத்
தாங்கருங் கொள்கை தாங்கித் தாமுடன் சென்று பின்னா
ளோங்கிய வுலகமூன்று மொருவழிப் படுக்கலுற்றுப்
பாங்கினால் வைசயந்தன் பருப்பதசிகரஞ் சேர்ந்தான்"
எனவும், மற்றோர் பகுதியில் பத்திரமித்திரன் என்ற பெரு வணிகன்
அறங்கேட்க வேண்டி விமல காந்தார மென்னும் மலை மீதேறி அங்குள்ள
பள்ளியில் தவம் புரியும் முனிவர் தலைவர் வரதர்மரென்னும் அறவோரின்
திருவடிகளை வணங்கி அறங்கேட்கும் காட்சியைப் பின்வரும் கவியால்
காட்டுகின்றார்.
"விமலகாந் தாரமென்னும் விலங்கலையிலங்கவேறி
யமலாமாயிலங்குஞ்சிந்தை யருந்தவன் வரதன்மாவின்
கமலமாயிலங்கும் பாதம் கைதொழுதி றைஞ்சி வாழ்த்தித்
திமிரமாம் வினைகடீரத்திருவற மருள்கவென்றான்."
இவ்வாறே வடமொழி தமிழ் மொழிகளிலுள்ள ஜைன காவியங்களிலும் காணலாம்.
திருக்குறளும் பள்ளியும்
அறமும், அறிவும் நிறைந்த கலைக் கூடங்களாம் அப்பள்ளிகளில், நீர்
சுரக்கும் சுனைகள் இயற்கையாகவே அமைந்திருந்தன. அறவுரைக் கேட்க
அப்புனிதப் பள்ளிக்குச் செல்வோர், அச்சுனைகளில் கைகால்களைக் கழுவிச்
சுத்தம் செய்துக்கொண்டு முனிவர்களை வணங்கி அறவுரைக் கேட்பர். இத்தூய
நெறியை மறந்து கால்களைக் கழுவாது பள்ளியுட் புகுவோரை திருக்குறளாசிரியர்
தேவர்,
"கழாஅக்கால் பள்ளியுட் வைத்தாற்றல் சான்றோர்
குழாத்துள் பேதை புகல்"
எனக் கடிந்துள்ளார். இப்பேருண்மையை ஆராயாத சில உரையாசிரியர்கள் பள்ளி
என்ற அறவோர் உறைவிடத்தை படுக்கை அறை எனப் பொருள் கூறி பிற்கால
அறிஞர்களை மயங்கவைத்துவிட்டனர்.
பண்டைய காலங்களில் ஏன் இன்றும் சிலர் வெளியிலே சென்று வீட்டிற்குள்
நுழைந்தால் கால்களைக் கழுவிக்கொண்டுதான் வீட்டின் மற்றப்
பகுதிகளுக்குச் செல்வார்கள். இல்லையேல் வீட்டிலுள்ள முதியோர்கள்
கண்டிப்பதை இன்றும் தமிழகக் குடும்பங்களில் காணலாம். இப்பழம்பெரும்
பண்பு நெறியை அறியாத சில உரையாசிரியர்கள் படுக்கை அறைக்கு மட்டும்
கால்களைக் கழுவிக்கொண்டு செல்லவேண்டுமென எழுதியது விந்தையினும் விந்தை.
மேலும் அவ்வுரையாசிரியர்கள் படுக்கை அறைகளைச் சான்றோரிடங்களாக
ஒப்பிட்டது வருந்தத் தக்கது மட்டுமல்ல வெறுக்கக் கூடியதுமாகும்.
எனவே திருவுள்ளத் தேவர் பெருந்தகை; பள்ளி எனக்குறிப்பிட்டது அறவோர்
பள்ளியே என்ற உண்மையை அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என
நம்புகிறேன்.
நாம் முன்னர் கண்டதுபோன்று மக்கள் வாழ்க்கைப் பண்பை மலரச்செய்யும்
அறநெறி பரவ, அன்புநெறி வாழ, அருள்நெறி வளர, நாகா�கம் நனிசிறக்க,
மக்கள் பலரும் உடன் பிறந்தாரே என்ற உணர்வு ஒளிவீச, உலகியல்
வாழ்க்கையைத் துறந்து, அறிவியல் துறையில் கலைச் செல்வங்களைப் படைக்க
மலைக்குகைகளிலே தவம் புரிந்த குணக் குன்றுகளாம், அறவோர்களை மக்கள்
பலரும் வாழ்த்தி வணங்கி வந்தனர்.
சைத்தியம் சைத்தியாலயம் :
ஜைன சமய சாவகர்கள் பலரும் தினந்தோறும் பஞ்ச நமஸ்கார மந்திரத்தைக்
காலையிலும் மாலையிலும் ஓசையின்றி ஓதுவர். இப்புனித மந்திரத்தை ஓது
முன்னரும் ஓதிய பின்னரும் நவமந்திரம் என்ற மந்திரத்தை ஒரு முறை ஓதுவர்.
அதாவது அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வசாதுக்கள்,
ஜினதர்மம், ஜினஸ்ருதம், ஜினசைத்தியம், ஜின சைத்தியாலயம் என ஒன்பது
மந்திரங்களாகும். இவைகளில் எட்டாவது ஜினசைத்தியம் என்பது. ஜினர்
மலைகளில் தவத்தோர் வழிபடும் தீர்த்தங்கரர் திருமேனிகளாகும்.
ஜினசைத்தியாலயம் என்பது கிராம நகரங்களில் அமைக்கப்பெற்றுள்ள அருகர்
கோயில்களாகும். இவ்விரண்டையும் முறையே அக்ருத்திமசைத்தியாலயம்,
க்ருத்திமசைத்தியாலயம் என வடமொழியில் அழைப்பர். அக்ருத்திம
சைத்தியாலயம் எனில் எவராலும் அமைக்கப்படாமல் இயற்கையாய் அமைந்த
மலைக்குகைகள் என்றும், க்ருத்திம சைத்தியாலயம் எனில் மன்னர்களாலும்,
செல்வர்களாலும் கட்டி அமைக்கப்பெற்ற செயற்கைக் கோயில்கள் என்றும்
பொருள். எனவே அக்ருத்திம சைத்தியாலயத்தில் செதுக்கப்பெற்றுள்ள
தீர்த்தங்கரர் சிலைகளைக் குறிப்பிடும்போது ஜினசைத்தியம் என ஓதி
வணக்கம் செலுத்துவர். இத்தகு சிறப்பமைந்த மலைப் பள்ளிகளை வாழ்த்தி
வழிபாடியற்ற வடமொழியில் சைத்திய வந்தனை என்றும், தமிழ் மொழியில்
திருப்பாமாலையில் சைத்ய பக்தி என்றும் சுலோகங்களும் அகவல்பாக்களும்
உள்ளன. இத்தெய்வீகப் பள்ளிகளைப் பரம தீர்த்தம் எனவும் போற்றி வந்தனர்.