 |
இவ்வாறே கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருந்தகையும் ஜைன முனிவர்களின்
பெருமையை சுக்��வன் வாயிலாக விளக்கியுள்ளார். அக்காட்சியைக் காண்போம்.
இலங்கைக்குச் செல்ல வானர சேனைகளை அமைத்து அப்படைகளுக்குத தலைவர்களாக
அனுமானையும் அங்கதனையும் அமர்த்தி வழி அனுப்பியபோது, போகும்
வழிகளிலுள்ள சிறப்பிடங்களைக் கூறிய சுக்��வன் வேங்கடமலை சிறப்பைக்
கூறுகையில், வடசொற்கும் தென் சொற்கும் வரம்பாயுள்ள வேங்கடம்
சென்றடைவீர். பிறவிக்குக் காரணம் நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளே
என்பதை அறிந்து, அவ்வினைகளை அறுக்க வேண்டி தவம்
புரியும் இரு
வினைகளின் பகைவர்களாகிய கடையிலா ஞானத்தையுடைய முனிவர்கள் அம்மலைகளில்
உறைகின்றனர். அவர்களை அம்மலையின் அடிவாரத்தினின்றே வணங்கி விட்டுச்
செல்லுங்கள் எனக் கூறுகின்றார். இச்செய்தியைக் கம்பர் யாத்தக் கவியிலே
காண்போம்.
"இருவினையும் இடைவிடா எவ்வினையும்
இயற்றாதே இமையோர் எய்தும்
திருவினையும் இருபதம்தேர் சிறுமையையும்
முறையொப்பத் தெளிந்து நோக்கிக்
கருவினைய திப்பிறவிக் கென்றுணர்ந்து ஆங்கு
அதுகளையும் கடையில் ஞானத்து
இருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளார் ஈண்
டிருந்தும் வணங்கற் பாலர்"
எனக் கடையிலா ஞானத்தையுடைய ஜைன முனிவர்களைப்
படம்பிடித்துக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தமிழக மலைகளில் தவமியற்றிய ஜைன முனிவர்களின் சிறப்பைப் பல
நூல்களில் காணலாம்.
"பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை ஆனை-இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு"
எனப்போற்றிப் புகழ்ந்துள்ள வெண்பாவொன்று பெருந்தொகை நூலிலே
காணப்படுகிறது. பிறவிப் பிணியறுக்கும் பெருமலைகளெனச் சிறப்பித்துள்ளது
அவ்வெண்பா. ஒரு காலத்தில் மதுரைப் பகுதிகளில் ஜைன சமயம்
சிறப்புற்றோங்கிவளம் பெற்றிருந்தது. ஆகவே மதுரையைச் சுற்றி உள்ள
மலைகளில் ஜைன முனிவர்கள் பள்ளிகள் அமைத்துக்கொண்டிருந்தனர் என்பதையும்,
எங்கும் அறவுரையாற்றி மக்கள் பண்பாட்டை வளர்த்து வந்தனர், என்பதையும்
சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி இருவருடன் மதுரைக்குப் போக விழைந்த
கவுந்தியடிகள்,
"மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றியவுள்ள முடையே னாதலிற்
போதுவல் யானும் போதுமின்."
என்றார். எனவே மதுரையிலும் மதுரைப் பகுதிகளிலும் மாசறு காட்சியோராகிய
அறவோர்கள் அறவுரையாற்றி வந்தனர் என்பதும், அதனால் தீதிலா மக்கள்
மலிந்திருந்தனர் என்பதும் கலங்கரை விளக்கம் போல் காண்கிறோம்.
பெருந்தொகை வெண்பாவினின்றும் அறவோர் தவம்
புரிந்த அவ்வெட்டு மலைகளும்
மதுரையைச் சுற்றியுள்ள பல மலைகளில் சிறப்புடையதாகப்
போற்றப்பட்டிருப்பதால் இவைகள் மிகப் பழமை வாய்ந்தவை எனப்
புலப்படுகிறது.
ஜைன முனிவர்கள் தவம் புரிய இயற்கையாயமைந்த மலைக் குகைகளை மேற்கொண்டது
வரலாற்றுச் சிறப்புடையது. அறிவியல் துறையிலாராயின் மலைக் குகைகள்
முற்றுந் துறந்த முனிவர்களுக்குப் பொருத்தமுடையதென்பது தெளிவாகும்.
உலகுக்கு முதன் முதல் அஹிம்ஸையின் அடிப்படையில் அறம் உரைத்தப் பகவான்
விருஷப தேவர் இல்லறம் துறவறமாகிய இரு பேரறங்களை வகுத்தருளினார்.
இல்லறம் உலகியல் வாழ்க்கைக்கும் துறவறம் ஆன்மீக மேன்மைக்கும்
இன்றியமையாதனவாகப் படைத்தருளினார். இக்காலமே மனிதகுல வரலாற்றில்
புதிய சகாப்தத்தின் தொடக்கம். ஆன்மா வீடு பேறடைய துறவறம் மேற்கொண்டு
தவமியற்றி வினைகளை வென்றாலன்றி வீட்டுலகம் பெறவியலாது என
அறுதியிட்டுக் கூறினார். துறவறம் மேற்கொண்டதும் படிப்படியாகத் துறவற
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து இறுதியாக அகப்பற்று புறப்பற்றுக்களை
அகற்றியதற்கறிகுறியாக நிர்வாண நிலையில் நின்று தவம்
புரிதல் வேண்டும்.
இந்நிர்வாண நிலையை முதன் முதல் பகவான் விருஷப தேவரே மேற்கொண்டு
கைலாசகிரியில் கடுந்தவம்
புரிந்து வீடு பேறடைந்தார். அக்கால முதலே
நிர்வாண நிலையை மேற்கொண்ட ஜைன முனிவர்கள் இயற்கையாயமைந்த
மலைக்குகைகளில் தவமியற்றலாயினர். இந்நிர்வாணத் துறவு நிலை உடம்பையும்
மிகுதியாகக் கருதும் முற்றுந் துறந்தப் பற்றற்றப் பண்பு நெறியின்
பாங்காகும். இப் பெருநிலையைத் திருக்குறளாசிரியர் தேவர் பெருமாள்,
"இயல்பாகும் நோன்பிற் கொன்றின்மை உடைமை
மயலாகும மற்றும் பெயர்த்து"
"மற்றுந் தொடர்பாடெவண்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க்கு உடம்பும் மிகை."
எனப் பகவான் விருஷப தேவர் அருளிய துறவற நெறியை வலியுறுத்தி
விளக்கியுள்ளார். திருமதி. ஸ்டீவன்சன் அம்மையார் தாம் எழுதிய
ஜைனத்தின் உயிர்நாடி என்னும் நூலில் "ஆடையைக் களைந்தெறிபவர் எல்லாத்
துன்பங்களையும் களைந்தெறிபவராக அமைந்து விடுகின்றார். அவர் குளிக்க
நீரும் வேண்டா. நிர்க்கிரந்த ஜைன முனிவர்கள் நன்மை தீமை எதையும்
நினைவிற்கொள்வதில்லை. அத்தகையோர் உடலை மூடிக்கொள்ள ஆடையும் வேண்டுமோ
என எழுதியுள்ளார்.
பாரசீகக் கவிஞர் ஒருவர் நிர்வாண ஜைன முனிவர்கள் தெய்வீக உடையே
அணிந்திருக்கிறார்கள் எனப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
மெய்த்துறவின் மேன்மையை நோ�தின் உணர்ந்த இவ் விருபேரறிஞர்களின்
பேருரைகள் திருக்குறளுக்கு அரணாக அமைந்துள்ளன. திக்குகளையே ஆடையாக
அணிந்துள்ள இத்தெய்வீக முனிவர்கள் நட்பு, பகை, விருப்பு, வெறுப்பு,
இன்பம், துன்பம் ஆகியவற்றினின்றும் அகன்று குளிர், வெப்பம், பசி, பிணி
முதலியவற்றை ஏற்று வெற்றி காணும் வீரதவத்தோராவார்கள். மக்கள்
வாழ்க்கைச் சிறப்பிற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இன்றியமையாத
அறநெறிகளைப் பரப்புவதே தங்கள் கடமையாகக் கொண்டவர்கள். அறம், அறிவு ஒளி
தந்து மனிதனைத் தவறான பாதையில் செல்லவொட்டாமல் தடுக்கும் ஓர் அரிய கருவி. மனிதனுடைய மனசாட்சியையும் தன்மானத்தையும் வளரச் செய்யும்
தத்துவக்கலை. மனிதனின் இன்ப வாழ்விற்கு இயைந்தது அறநெறி ஒன்றே என்பதை
பகவான் விருஷப தேவர் முதல் இந்நாள் வரை உள்ள ஜைன அறவோர்கள் கண்டறிந்த
உண்மை. மலைப் பள்ளிகளிலே தவம்
புரியும் முனிவர்களேயன்றி வானிலே உலவும்
ஆற்றல் படைத்த சாரண பரமேட்டிகள் என்ற ஜைன அறவோர்கள் தரையிலே இறங்கி
மக்களுக்கு அறம் உரைத்து வந்தனர். அவ்வானுலவும் தெய்வீகப் போதகர்கள்
தரையிலே வந்து அறவுரை யாற்ற ஆங்காங்கு உலக நோன்பிகளால் (இல்லறத்தார்)
அமைக்கப் பெற்றிருந்த பளிங்குக் கற்களாலாய சிலாதலங்களில் வான் வழியே
வந்து அறவுரை அருளிச் செல்வர். அவ்வதிசயக் காட்சியை ஜைன இலக்கியங்கள்
பலவற்றிலும் காணலாம். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தில் நாடுகாண்
காதையில்,
"பெரும்பெய ரைவ ரொருங்குடனிட்ட
இலங்கொளிச் சிலாதலமேயிருந் தருளிய
பெருமகன திசயம் பிறழாவாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற"
என வரும் வா�களால் அறியலாம். இங்கே கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி
ஆகிய மூவரும் சாரணப் பரமேட்டிகளை வணங்கி அறவுரைக் கேட்ட அரிய செய்தியையும் இளங்கோவடிகள் படம் பிடித்துக்காட்டியுள்ளார். இவை
மட்டுமல்ல! ஆற்காட்டிற்கும் திமிரிக்கும் இடையில் விளங்கும் ஜினர்
மலையாகிய திருப்பான் மலைப் பள்ளியில் "அறமல்லது துணையில்லை" எனச்
சொல்லில் மட்டும் போதாதெனக் கல்லிலும் தீட்டி அறநெறியை
வலியுறுத்தியுள்ளனர்.
நல்லறம் நவிலும் நல்லோராகிய அம்மெய்த் துறவிகள் காமம், வெகுளி,
மயக்கம் அகன்று, நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளை
(இரத்தினத்திரயம்) அணிகலன்களாகப் பூண்டவர்கள். சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் ஆகிய ஐந்தின் வகை தொ�ந்த விஞ்ஞானிகள், அந்நற்றவ மூர்த்திகளில்
சிலர் சுருத ஞானிகளாகவும், சிலர் மனப்பர்யை ஞானிகளாகவும், சிலர்
அவதிக் ஞானிகளாகவும் விளங்கியவர்கள். மற்றும் சிலர் வானமும் நிலனும்
தாமுழுதுணரும் வாலறிவு பெற்றவர்கள் என்பதை மதுரைக் காஞ்சி செப்புகிறது.
அறிஞர் திலகங்களாய் விளங்கும் இம்முனிபுங்கவர்கள் வீடுபேற்றைக்
குறிக்கோளாகக் கொண்டு தவம்
புரிவதால், ஐம்புலன் அடக்கம் வேண்டி
பட்டினி நோன்பை மேற்கொண்டவர்கள்.
"உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
என்ற தேவா�ன் திருமொழிக் கேற்பத் தவம்
புரிபவர்கள். தினந்தோறும் ஒரு
வேளையே உணவருந்துவோர் சிலர் ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கும், மூன்று
நாட்களுக்கு ஒரு முறையும் உணவருந்துவோர் சிலர். இவ்வாறே வாரத்திற்கொரு
நாளும், மாதத்திற்கு ஒரு நாளும் உணவருந்தும் அறவோரும் இருந்தனர்.