 |
இவ்வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள திருக்குறளாசிரியா�ன் திருக்கோயில் வரலாற்றை ஆராய்வோம்.
'மறமேமுனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியும் அருட்கொண்டலே யதரஞ்சிவந்த
நிறமே கா�யவொண் மாணிக்கமே நெடுநாளொழித்துப்
புறமே திரிந்த பிழையடியேனைப் பொறுத்தருளே'.
எனத் திருநூற்றந்தாதி ஆசிரியர் மயிலாபுரியில் கோயில் கொண்டிருந்த
நேமிநாத தீர்த்தங்கரரைப் போற்றியுள்ளார். இதுபோன்று வேறு பல தோத்திரப்
பாக்களாலும், மயிலாப்பூரில் கிடைத்துள்ள ஜைன தீர்த்தங்கரர்களின்
உருவச் சிலைகளாலும், கல்வெட்டுச் செய்திகளாலும், பண்டைய காலத்தில்
ஜைன சமயத்தின் உறைவிடமாய் மயிலாப்பூர் விளங்கிற்றென்பது தெளிவாகிறது.
இத்தகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மயிலாப்பூரில் நன்னூல் உரை ஆசிரியர்
மயிலைநாதர், அவிரோதிநாதர், நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் போன்ற
பல்கலைச் செல்வர்களாகிய ஜைன அறவோர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும்
ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். மயிலாப்பூரில் வாழ்ந்த ஜைனப் பெருமக்கள்
நேமிநாதரை வழிபட்டதைப் போன்றே தெய்வப் புலவராம் திருக்குறளாசிரியரையும்
வழிபட மயிலையில் கோயில் ஒன்று அமைத்தார்கள். அக்கோயிலில்
திருக்குறளாசிரியா�ன் திருவடிச் சின்னங்களைப் பொறித்து வைத்து வழி
பாடியற்றி வந்தனர்.
நமது பாரர நாடடின் வரலாற்றை ஆராயின் ஜைன சமயத்தவரே முதன் முதல் தங்கள்
தீர்த்தங்கரர்களையும், ஆச்சாரியர்களையும், முனிவர்களையும் வழிபட
அம்மகான்களின் திருவடிச் சின்னங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளது
நன்கு விளங்கும். குறிப்பாக இமயமலையில் கைலாசகிரியிலும், வங்காளத்தைச்
சார்ந்த சம்மேதசிகர மலையிலும், சம்பாபுரி, பாவாபுரி, கிர்னார் போன்ற
பல மலைகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவடிகள் பொறிக்கப் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பொன்னூர் மலையில் திருக்குறளாசிரியர் குந்தகுந்தாச்சாரியார்
திருவடிகளையும், இப்பெருமான் பிறந்த திருத்தலமாகிய * குந்தகுந்தா
மலையிலுள்ள திருவடிகளையும், திருப்பறம்பூர் அகளங்கதேவர்
திருவடிகளையும், ஜின காஞ்சியில் வாமனமுனிவர் திருவடிகளையும்,
விழுக்கம் குணசாகரர் திருவடிகளையும், திருமலையில், ஸ்ரீவிருஷபசேன
கணதரர், ஆச்சார்யர் சமந்தபத்ரர் வரதத்த முனி ஆகியோரின் திருவடிகளையும்
காணலாம்.
கி.மு. 3-ம் நூற்றாண்டில் தென்னகம் விஜயம் செய்த பத்திரபாகு
சுவாமிகளின் திருவடிகளும், மெளா�ய சக்கரவர்த்தி சந்திரகுப்த மன்னா�ன்
திருவடிகளும் சிரவண பெள்குளாவில் அழகாகப் பொறிக்கப் பெற்றுள்ளன.
இவ்வழக்காற்றின் துறையிலேயே மயிலையிலும் திருக்குறள் ஆசிரியா�ன் சிறப்புப் பெயர்களாகிய திருவுள்ள நாயனார், அல்லது திருவுள்ள தேவர்
எனப் போற்றி அவர் திருவடிகளை ஜைனப் பெருமக்கள் வணங்கி வந்தனர்.
இவ்வழிபாட்டில் ஏனைய சமயத்தவரும் கலந்துகொள்ளவார்கள். அவர்கள்
இக்கோயிலைக் குறிப்பிடும்போதெல்லாம் தமிழகத்து ஜைனப் பெருமக்களின்
பட்டப்பெயராகிய நயினார் என்பதைக் கொண்டு நயினார் கோயில் என அன்புடன்
அழைத்துப் போற்றுவார்கள். அவ்வழக்கம் இன்றும் அப்பகுதியில்
வழங்குவதைக் காணலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 'திருவள்ளுவர்
கோயில் எது?' என்று கேட்டால் அக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில்
வசிக்கும் மக்கள் ஒன்றும் விளங்காமல் விழிப்பார்கள். நயினார் கோயில்
எனில் 'அதோ' எனச் சுட்டிக் காட்டுவார்கள்.
கி.பி. 17-ம் நூற்றாண்டுவரை மயிலாப்பூரில் பெரும்பாலும் ஜைன சமயத்தவரே
வாழ்ந்து வந்தமையால் அவர்களின் பட்டப் பெயராகிய நயினார் என்னும்
சிறப்புப் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைத்து வந்தனர். மயிலையில்
ஜைனர்கள் மலிந்திருந்தனர் என்பதைப் பண்டைய நூலாகிய தோத்திரத்
திரட்டில் 'மயிலாப்பூர் பத்து' என்னும் பதிகத்தில்,
'ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனையுயரமோ ரோசனையில்
களிதரு நாண்மலரணியும் சோகுடையரி குலநாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடருநால் வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனையேமலி திருமயிலாபுரியே'
எனவரும் தோத்திரப் பாவின் கடைசி வா�யால் விளங்குகிறது. இதனால்
மயிலாப்பூரில் சாவகர்கள் (நயினார்கள்) சிறப்பாகவும் செழிப்பாகவும்
வாழ்ந்திருந்தனர் என்பதையும் அறிகின்றோம். 'அந்''நயினார்' பட்டம்
தமிழகத்தில் வாழும் ஜைனர்களிடம் இன்றும் சிறப்பாக வழங்கி வருகிறது.
ஜைன சமயத்தினின்றும் வேறு சமயம் புகுந்தவர்களும் தங்கள் பண்டைய
நயினார் பட்டத்தைத் துறக்கவில்லை என்ற உண்மையை இன்றும் காணலாம்.
குறிப்பாக நீறுபூசி வேளாளர்களும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, செஞ்சி,
ஆரணி பகுதிகளில் காப்பலூர். கலசப்பாக்கம் கிராமங்களில் வசிக்கும் பல
வேளாளர்களும் பண்டைய நயினார் பட்டத்தையே வைத்துக்கொண்டுள்ளார்கள்.
தென்னாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலோருக்கும் நயினார் பட்டம்
வழங்குகிறது. அவர்களும் ஜைனர்களாயிருந்து மாறியவர்கள் என்பதற்கு
ஆதாரங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் ஆழ்வார் திருநகர்,
ஸ்ரீவைகுண்டம், தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள சைவ சமயத்து
வேளாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நயினார் பிள்ளை எனத் தங்கள்
பண்டைய சமயப் பெயரை விடாது அமைத்துக்கொண்டுள்ளார்கள். மேலும்
தமிழகத்தின் பல பாகங்களில் நயினார் குளம், நயினார் மண்டபம், நயினார்
மேடு, நயினார் குப்பம் என வழங்குவதைக் காணலாம். அவைகள் யாவும்
ஜைனர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்.
இத்தகு சான்றுகளால் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த நயினார்கள்
வழிபாடியற்றிய திருக்குறளாசிரியர் நாயனார் கோயிலே என அழைக்கப்படுகிறது
என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அத்திருவடிகள் எங்கே?
பண்டைய காலமுதல் திருக்குறளாசிரியா�ன் திருவடிகளை வணங்கிவந்த
நயினார்கள் (ஜைனர்கள்) மயிலாப்பூரில் பிற்காலத்தில் அருகிவிட்டார்கள்.
அங்குள்ள கோயில்களும், சின்னங்களும் மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும்,
அழிக்கப்பட்டும் போயின. இது மறுக்கவியலாத வரலாற்றுண்மை! இந்நிலையில்
சுமார் 100 அல்லது 120 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளாசிரியருக்கு
உருவச்சிலை வைப்பதாகக் கூறித் தாடி மீசை சடையுடன் கூடிய
உருவச்சிலையைச் செய்து வந்து திருக்குறளாசிரியர் திருவடிச்
சின்னங்களுக்குப் பின்னே மூலவராக அமைத்தார்கள். அதற்குச் சில
ஆண்டுகளுக்குப் பின்னர் அத்திருவடிச் சின்னத்தைப் பெயர்த்தெடுத்து
மறைத்து விட்டார்கள்.
இவ்வடாத செயலைக்கண்ட அங்குள்ள பொதுமக்கள் அர்ச்சகரையும் அவ்வாறு
செய்ததற்குக் காரணமாய் இருந்தவர்களையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய
ஆரம்பித்தார்கள். இவ்வெதிர்ப்பின் வேகத்தை அறிந்த அர்ச்சகர்கள்
அச்சின்னத்தைச் சிதைத்துச் சில மாறுதல்களுடன் உள் கோவிலை விட்டு
வெளியே மண்டபத்தில் வைத்தார்கள். இவ்வாறு சில காலம் அம்மண்டபத்திலேயே
இருந்தது. என்றாலும் அவ்வர்ச்சகர்கள் அத்திருவடிகள் அங்கிருப்பதில்
வெறுப்பே கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அங்கு வருபவர்கள்
அத்திருவடிகளையும் தொழுது வந்தார்கள். அதனால் சில ஆண்டுகள் கழித்து
அச்சின்னத்தை அக்கோயிலின் மதிற்சுவா�ல் வைத்து மூடிவிட்டார்கள். அதனை
அறிந்த பொதுமக்கள் எதிர்க்கவே புதைத்த இடத்திலேயே திறந்துவைத்து
விட்டார்கள். இக்கிளர்ச்சிகளெல்லாம் ஜைனரல்லாத அப்பகுதிப் பொது
மக்களாலேயே நடந்தது. ஏனெனில் அவர்கள் பல காலமாக அத்தேவர் திருவடிகளைத்
தொழுது வந்த
உரிமையாலும் அன்பாலும் ஆகும். ஜைன சமயத்தவர் வழிபடும்
சின்னம் என்பதற்காகவும், திருக்குறளாசிரியா�ன் சிறப்புப் பெயராகிய
திருவுள்ள நாயனார் என்னும் பெயர் மாறித் திருவள்ளுவர் என்னும் பெயர்
மாறித் திருவள்ளுவர் என வழங்குவதை நிலை நிறுத்தவுமே இச்சதிச் செயல்
நடந்ததெனில் மிகையாகாது.
இவ்வரலாற்றைச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அந்நயினார்
கோயிலின் எதிர் வீடுகளில் வசித்து வந்த வயது முதிர்ந்தோரின் வாயிலாகக்
கேட்டறிந்தேன். இச்செய்தியைத் தமிழ்ப் பொ�யார் திரு.வி.க.
அவர்களிடத்தும், பேராசிரியர் எ. சக்கரவர்த்தி நயினார் அவர்களிடத்தும்
நான் தொ�வித்தேன். அப்பொ�யார்கள் இருவரும் வியப்புற்று அங்குச் சென்று
கோயிலின் எதிர்வீட்டு வாயிற்படியில் நின்றிருந்த முதியோரை விசாரித்து
உண்மையை அறிந்தார்கள். பின்னர் 1945-ஆம் ஆண்டில் திருக்குறள் ஆசிரியா�ன் திருவடிகளைப் படமாக வரைந்து 'ப்ளாக்' செய்து ஒரு பிரசுரம்
வெளியிட்டேன். 1947-ம் ஆண்டு பிப்ரவா� மாதம் 16-ம் நாள் மயிலாப்பூர்
குயப்பேட்டை வீரப்பெருமாள் தெருவில் மயிலைத் திருவள்ளுவர் கழகத்தின்
ஆண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்ப் பொ�யார் திரு.வி.க.
அவர்களின் வற்புறுத்தலின்போ�ல் யான் தலைமை வகித்தேன். எனது
தலைமையுரையில் அக்கோயிலின் வரலாற்றைப் பேசுமாறு தமிழ்ப் பொ�யார்
பணித்தார்கள். அவ்வாறே மேலே குறிப்பிட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன்.
இதனைக் கேட்ட அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் வியப்புற்றனர். அது
மட்டுமல்ல! பண்டைக்கால மதக் காழ்ப்பின் போக்கினை எண்ணி எண்ணித்
திகைத்துவிட்டார்கள். கூட்டம் முடிவடைந்ததும் அவ்விழாவில்
சொற்பொழிவாற்றிய அறிஞர் பெருமக்களான தமிழ்ப் பொ�யார் திரு.வி.க.
அவர்கள், பன்மொழிப்புலவர் டி.பி. மீனாட்சி சுந்தரனார் அவர்கள், தமிழ்
அறிஞர் ரெவரெண்ட் அருள் தங்கையா அவர்கள், எஸ்.லக்ஷ்மிரதன் பாரதியார்
பி.ஏ., பி.எல்., அவர்கள், திரு. கே. அன்பழகன் எம்.ஏ., அவர்கள் ஆகிய
அறிஞர்களும், புலவர்களும் திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று
பார்வையிட்டார்கள். யான் பொதுக்கூட்டத்தில் விளக்கியவாறே மதிற்சுவா�ல்
வைத்துள்ள திருவடிச் சின்னத்தைக் கண்டு முற்றும் உண்மை உண்மை என
உள்ளம் பூரிக்கப் பேசிக்கொண்டார்கள். அது மட்டுமல்ல; அங்கு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அவ்வீதி மக்களில் ஒரு வயது முதிர்ந்த
அம்மையாரை நோக்கி இது என்ன கோயில் எனக் கேட்டார்கள். உடனே அக்கிழவி
நயினார் கோயில் எனப் பகர்ந்தார். எதிர்பாராத இவ்விடையைக் கேட்டதும்
புலவர்களும், பொதுமக்களும் கைக்கொட்டி மகிழ்ந்தார்கள். அவர்கள்
அனைவரும் என்னை நோக்கித் தாங்கள் கூறியவாறு நயினார் கோயில் என்பது
மறுக்கவியலாத வரலாற்று உண்மை எனப் பாராட்டினர். திருக்குறளாசிரியர்
தேவர் திருவடிச் சின்னத்தை அகற்றித் திருவள்ளுவர் உருவச் சிலையெனக்
கற்பனையாகச் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தும் தொன்றுதொட்டுவரும்
நயினார் கோயில் என்ற பெயரும் தேவர் திருவடிச் சின்னமும் அம்மக்கள்
உள்ளத்தினின்றும் அகலாது நின்று நிலவுகிறது என்றும் வியந்து
பேசினார்கள். இத்தகு அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் உண்மை
கண்ட நாம் பண்டைய வரலாற்றுச் சின்னத்தை நிலைநாட்ட முற்பட வேண்டும்.
இதனால் நமது ஆசிரியர்களாகிய அறவோர்கள் பால் நாம் கொண்டிருக்கும்
மதிப்பையும், பக்தியையும் உலகோர் கண்டு வியப்பர். உயர்ந்தோர்
திருவடிகளை வணங்கும் நமது பண்பும எந்நாளும் அழியாது வழி வழி வளரும்.
ஆகவே நமது பாரத அரசியலரால் வெளியிடப்பட்டதும், நமது சென்னை
அரசியலாரைக் கலந்து வரையாததுமாகிய திருக்குறளாசிரியா�ன் திருவுருவம்
படத்தைப் பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் ஏற்காததும் பலரும் அறிந்ததே. 'மழித்தலும்
நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்துவிடின்' எனத் திருக்குறளாசிரியர்
எவைகளை வேண்டா என வெறுத்தாரே அவைகளையே அவர் தலையில் வைத்துச்
சுமத்தியது போன்ற உணர்ச்சியே நமது உள்ளத்தில் உருவாகிறது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பலரும் சமய, சாதி அரசியல் கட்சி நோக்கங்களை
மறந்து, 'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்னும் அருட்கொடியைத் தாங்கி
நிற்கும் நமது தேவர் பெருமானைப் பண்டைய காலச் சான்றோர்கள் வழி நின்று
அவ் அறவோரின் திருவடிகளையே சிலையாகச் செய்து வாழ்த்தி வணங்குவோமாக.
திருவள்ளுவா�ன் திருமேனி தாங்கிய தங்கக்காசு
ஐராவதம் மகாதேவன்
திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையிலிருந்து
வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தொ�ந்திராத ஒரு வியப்பான
செய்தியாகும்.
கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகா�த்து
வைக்கப்பட்டுள்ள நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத்
தங்க நாணத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன் முதலாகக்
காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின்
முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும்,
பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று
இக்குறிப்புத் தொ�விக்கிறது. இக்காசு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்
கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது
என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும்
புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும்,
இதேபோன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில்
இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகா�த்து
வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தொ�ந்துகொள்ள முடிகிறது.
மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று
தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில்
தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசு வெளியிட்ட பல 'நட்சத்திரப்
பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த
அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலேயே விட்டுவிட்டனர் என்று
தோன்றுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தாப் பல்கலைக் கழகத்து
வரலாற்றுப் பேராசிரியர் பி.என். முகர்ஜி கல்கத்தா இந்திய
அருங்காட்சியகத்தில் சேகா�த்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின்
பட்டியலை மட்டும் மிகத் தெளிவான வண்ணப் படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
இந்நூலில்தான் முதன்முதலாக இங்குக் குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின்
வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே
மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல்
சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில்
காணப்படும் திருவுருவம் ஒரு முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ இருக்கலாம்
என்று முகர்ஜி கருத்துத் தொ�வித்துள்ளார்.
நாணயத்தைப் பற்றிய விவரங்கள்
காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவா�ன் திருவுருவம்
காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின்மீது பத்மாசனமிட்டுத் தியான
நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை வலது தொடை மீதும் இடது கை
சின்முத்திரை நிலையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும்
இடது தோளில் மடித்துப்போட்ட துண்டும் அணிந்திருக்கிறார். மழித்த தலை;
தலைக்கு மேலே ஒரு குடை; அவருக்கு முன் ஒரு சிக்குப் பலகையில் விரித்த
நிலையில் ஒரு நூல் வைக்கப்பட்டுள்ளது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை
நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த முனிவர்?
காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான
ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான
சின்னங்களும் காணப்படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது
அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தொ�கிறது. மேலே உள்ள குடை,
அமர்ந்துள்ள பீடம், பத்மாசனமும் சின்முத்திரையும் கொண்ட தியான நிலை,
எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவமும் ஒரு முனிவரைக்
குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையிலுள்ள
வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப்
போட்டிருக்கும் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று
அடையாளம் காண முடிகிறது. இவருக்கு முன்னால் விரித்த நிலையில்
வைக்கப்பட்டுள்ள நூல் இவர் ஓர் ஆசானாகவோ பெரும் புலவராகவோ இருக்க
வேண்டும் என்று உணர்த்துகிறது. யார் இந்த முனிவர்? இவருடைய
திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது?
காசில் எழுத்துகள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட
அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.
எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து முன்னே
வைக்கப்பட்டுள்ள ஒரு நூலுடன் சித்திரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம்
திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமே என்று ஓர் எண்ணம் என் மனதில்
பளிச்சிட்டது. இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக்
கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும்
பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு
எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு. எம்.
பரமசிவம ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காசின் காலம்
இக்காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்துமுனை நட்சத்திரச்
சின்னத்திலிருந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசு
சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட 'நட்சத்திரப்
பகோடா' அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில்
இதுவுமொன்று என்று தொ�கிறது. மேலும் இக்காசு இயந்திரத்தின் மூலம்
மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை
ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர
நாணய சாலையை நிறுவித் தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை
வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தங்க
வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆகையால் இக்காசு
1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுக்
காலத்திற்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச்
சொல்லமுடியும்.
எல்லிஸ் துரையும் திருக்குறளும்
அக்கால கட்டத்தில் �பிரான்சிஸ் வைட்ட எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி
சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு
ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய
தென்னிந்திய மொழிகளிலும் வட மொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார்.
தமிழ் நூல்கள் அச்சேறியிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச்
சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ்
முதலிய திராவிட மொழிகள் சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய
மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு
அறிவித்த பெருமை இவரையே சாரும்.
எல்லிஸ் துரைக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பா�ய
பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களைத் தேர்ந்தெடுத்து
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர்
எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழிப் பெயர்ப்பாகும்.
துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப் பெறுமுன்னரே எல்லிஸ் துரை
இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டிருந்தபோது தற்செயலாக விஷ உணவை
அருந்தி அகால மரணமடைந்தார். அவர் இறந்தபின் வெளிவந்த அந்த நூலை
மீண்டும் சிறந்த முறையில் ரா.பி. சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார்.
இந்நூலில் எல்லிஸ் துரை முந்நூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்
நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள்களிலிருந்து அவருடைய ஆழ்ந்த
புலமை வெளிப்படுகிறது. இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற
நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள்களைக் கையாண்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.