61

கட்டோடு வீடும் உயிரும் பிறபொருளும்
முட்டின்றிச் சொல்லுவது நூல்.

 

வினைபந்திக்கும் நிலையும், வீடுபேறு நிலையும், ஸசீவ, அசீவ பொருள்கள் நிலையும் முழுதாக உரைப்பது திரவியானுயோக நூலாம்.


 

நல்லொழுக்கம்

62 காட்சி உடையார் வினைவரும் வாயிலின்
மீட்சியா நல்லொழுக்கம் நன்று
 

நற்காட்சியாளரின் உயிரியல் வினைகள் வந்து சேராவண்ணம் அவ்வழியை அடைத்து அவரை நன்கு மீளச்செய்வது நல்லொழுக்கம் ஆகும்


 

மகாவிரதம்

63

குறைந்தூஉம் முற்ற நிறைந்ததூஉம் ஆக
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு

அந்த நல்லொழுக்கம் அணுவிரதம் மகாவிரதம் என இரண்டு என்று சொல்லுவர்


64

நிறைந்தது இருடிகட்கு ஆகும்; மனையார்க்கு
ஒழிந்தது; மூன்று வகைத்து.

மகாவிரதம் முற்றும் துறந்த முனிவர்களுக்கும் , அணுவிரதம் இல்வாழ்வார்க்கும் உரியதாம்; அணுவிரதம் மூவகைப்படும்.


இல்லறத்தார் விரதம்

65

அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம்.

 

ஐந்து பகுதிபட்ட அணுவதமும், மூன்று பகுதிபட்ட குணவதமும், நான்கு பகுதிபட்ட சிக்கா வதமும் இல்லறத்தார் விரதம் என அறிக.