தேவ மூடம்

31

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு.
 

 

தெய்வங்கள் நன்கு வாழவைக்கும் என்று அறியாமை கொண்டு வணங்குதல் மிக மோசமான தெய்வ மூடம்.
 


32

 மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை எத்தல்
துயக்குடைத் தெய்வ மயக்கு.

 

 (பிறவிக்குக் காரணமான) மோகம், ஆசை, கோபம் முதலான பண்புகளை உடையாரைத் தெய்வங்களாகப் போற்றுதல் ந்ம்பிக்கைத் தளர்ந்தாரது தெய்வ மூலமாகும்.


பாசண்டி மூடம்

33

மாசுண்ட மார்க்கத்து நன்றாரைப் பூசித்தல்
பாசண்டி மூடம் எனல்.

 பிறவியில் அழுத்தும் நெறியில் நின்ற மாற்றுக் காட்சியாரைப் போற்றி வணங்குதல் பாசண்டி (வேட)மூடம் எனப்படும்.
 


 மதம்

எண் வகை மதங்கள்

34

 பிறப்பு குலம்வலி செல்வம் வனப்பு
சிறப்புதவம் உணர்வோடு எட்டு.

 

குடி, குலம், வலிமை, செல்வம், எழில், பெருமை, தவம், அறிவு இவை எட்டாகும் மதம்.


 

செருக்கால் வீழ்ச்சியே

35

இவற்றால் பெரியெம்மாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்.

 

இவ்வெட்டுச் செருக்குகளால்'எமக்கு ஒப்பு இல்லை நாமேமேலானவர்' என்று இறுமந்து பிறரை இகழின் நற்காட்சி நாசம் அடையும்.