121

உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை
உள்ளார் மறத்தல் இறப்பு

 

மனம் மொழி செயல்களால் மாறுபடுதலும் சாமாயிகத்தில் விருப்பக் குறைவும் காலத்தில் செய்யாமையும் சாமாயிகத்தின் அதிசாரங்களாம்.


உண்ணா விரதம்

122 உவா அட்டமியின்கண் நால்வகை ஊணும்
அவாஅறுத்தல் போசதம் என்
 

சதுர்தசி அட்டமி ஆகிய திதிகளில் நால் வகை உணவிலும் விருப்பமின்றி இருத்தல் போசாத உபவாசம் எனப்படும்.
 


 

உண்ணாநோன்பின் போது வேண்டாதவை

123

ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று.

மகளிர் ஐம்பாவச் செயல்களையும் ஆடவர் அறுவகைத் தொழில்களையும் நீக்கி நீராட்டு மலர்ச்சூட்டு சந்தனம் முதலியவற்றை ஒதுக்குதல் வேண்டும்
 


 

நோன்பின் போது வேண்டத்தகுவன

124

அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதின் செய்யப் படும்.

உபவாச காலத்தில் அறம் கேட்டல் சிந்தித்தல் பிறருக்குரைத்தல் இவற்றைத் தவறாது மேற்கொள்ளல் வேண்டும்.


 

ஒரு வேளை உண்ணுதல்

125

உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல ஒருபோது எனல்.

 

நால்வகை உணவினை அறவே நீக்குதல் உபவாசம் என்றும் ஒரு வேளை ஏற்றல் போசதம் என்றும் கூறப்படும்