அருகன் வாழ்த்து

 

அணிமதிக் குடை அருகனைத் தொழ
அருவினைப் பயன் அகலுமே

 

அழகானவனும் முழு நிலவைப் போன்ற வடிவும் வண்ணமும் பெற்ற சந்திராதித்யம், சகல பாசனம், நித்ய வினோதம் என்ற முக்குடை உடையவனும் ஆகிய அருகப் பெருமானை வணங்க நீங்குவதற்க்கு அரிதான வினைகள் அகலும்.

 
 

அருங்கல மும்மை

1

முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்
குற்றம்ஒன்று இல்லா அறம்.

 

அனைத்துப் பொருளையும் ஒருங்கே அறியும் அறிவனை வாழ்த்தி, அவர் அருளிய குற்ற மற்ற அறத்தைக் கூறுவன்.

 
2

நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்
தொக்க அறச்சொல் பொருள்.
 

 

நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் கூடியதே அறம் என்று சொல்லப்படும் பொருள்.
நற்காட்சி

 
 

நற்காட்சி

3

மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந்தார்.

 

எல்லாப் பொருள்களின் இயல்புணர்ந்த அருகபெருமான் அருளிய உண்மைப் பொருள்களை தெளிதல் நற்காட்சி என்பர்.

 
 

நிலையான மெய்ப்பொருள்கள்

4

தலைமகனும், நூலும், முனியும்இம் மூன்றும்
நிலைமைய ஆகும் பொருள்

 

இறைவன், அவன் அருளிய ஆகமம், அதன்படி ஒழுகும் முனிவர் இம்மூன்றும் நிலைபெற்ற உறுதிப் பொருளாம்.

 
 

இறைவன்

 

இறைவன் இயல்பு

5

குற்றம் ஒன்றுஇன்றி, குறைஇன்று உணர்ந்துஅறம்
பற்ற உரைத்தான் இறை

 

குற்றம் குறை ஏதுமின்றி, அனைத்தின் இயல்பையும் உண்ர்ந்து, இல்லறத் துறவறங்களை எடுத்து விளக்கியவன் இறைவன்.