 |
"நல்லா ரறஞ்சொல்ல பொல்லார் புறங்கூற
அல்லார் அலர் தூற்ற" - திரு. ஞா.தே. பதிகம் 84
"கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்"
- திரு.ஞா.தே. பதிகம் 307
இப்பாக்களில் நல்லார் அறங் கூற என்பது ஜைன சமயத்தையும், பொல்லார்
புறங்கூற என்பது பெளத்த சமயத்தையும், அல்லார் அலர் தூற்ற என்றது
ஆசீவக சமயத்தையும் குறிக்கும். இவ்வாறே கஞ்சி மண்டையர் (பெளத்தர்)
கையிலுண்கையர் (சமணர்) வெஞ்சொல் மிண்டர் (ஆசீவகர்) என்பது போன்று பல
பாக்களில் காணலாம். குறிப்பாக ஜைன அறவோர்களைப் பழிக்கும் பாக்களைக்
காண்போம்.
"அந்தணாளர்
புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர்"
"ஆலும் மயிலின் பீலியமண்"
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்"
"வாதுசெய் சமணமும்"
"போதியாரும் பிண்டியாரும்"
"சாவாயும் வாதுசெய் சமணர்"
"தூய வெயிலின் றுழல்வார்"
"அரை யோடலர் பிண்டி மருவி"
"உறியோடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைக் கையர்"
"கடு நோன்பு நோற்கும் கொடும் பாவிகள்"
இவைகள் யாவும் ஜைனத் துறவிகளைக் குறிக்கும் பழிச்சொற்களேயாகும்.
இவ்வாறே பெளத்தர்களையும் ஆசீவகர்களையும் அவரவர்கள் கொள்கைகளைப்
பழிக்கும் சொற்களை ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஆங்காங்கு காணலாம்.
இவ்வேற்றுமைகளை அறியாத திரு. தி.நா.சு. அவர்கள் திருஞானசம்பந்தர்
தேவாரத்தினின்றும் சான்று கூறாமல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு அல்லது
அதற்குப் பின்னர் தோன்றிய ஒட்டக்கூத்தா�ன் பாக்களைக் கொண்டு மேற்கோள்
காட்டியுள்ளார்.
ஒட்டக்கூத்தர் பாக்களிலே-
"வேதப் பகைவர் தம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெம்கழுவிற்கு
ஏதப்படும் எண்பெருங் குன்றத்து
எல்லா அசோகும் எறிகெனவே"
- தாழிசை 218
"என்னக் கடிது எண்பெரு வெற்பும் விடா
எண்ணாயிர மூகரும்"
எனும் இரு பாக்களையும் மேற்கோள் காட்டி இதில் காணும் "எண்ணாயிர
மூகரும்" என்பதைக் கொண்டே அவர்கள் ஆசீவக சமயத்தைச் சார்ந்தவரென முடிவு
செய்துவிட்டார். ஒட்டக்கூத்தர் பாக்களில் காணும் "வேதப்பகைவர்" "அசோகமரம்"
"எண்ணாயிரம் மூகர்" ஆகியவைகள் ஜைன சமயத்தைச் சார்ந்தவையே யன்றி ஆசீவக
சமயத்தைச் சார்ந்தவையல்ல எனும் உண்மையை திரு. தி.நா.சு. அறிந்தாரில்லை.
அவருடைய வானவில் கட்டுரையில் "ஆசீவக சமயத்தை அறிந்துகொள்ள நூல்களில்லை"
என எழுதியுள்ளதினின்றே அவர்தம் ஆராய்ச்சிக் குறைபாடுடையது என்பதைக்
காட்டுகிறது. "வேதவேள்வியை நிந்தனை செய்பவர்" என்றும், "போதியாரும்
பிண்டியாரும்" என்றும் ஞானசம்பந்தர் தேவாரப்பாக்களில் ஜைன சமயத்தைப்
பழித்துள்ளதை முன்னரே கண்டோம். பிண்டிமரம் (அசோகம்) ஜைனசமயத்தின்
சின்னங்களில் தலைசிறந்தது. பகவான் விருஷபதேவர் முதல் மகாவீரர்
ஈறாகவுள்ள தீர்த்தங்கரர்களைப் போற்றும் நூல்களில் அசோகமரத்தின்
நிழலில் அமர்ந்தோர் எனப் போற்றப் பெற்றிருப்பதைப் புலவர் உலகமும்
வரலாற்று உலகமும் நன்கு அறியும்.
"பிண்டியின் கொழுநிழல் பிறவி நோய்கெட
விண்டவழ் கனைகதிர் வீரன் தோன்றினான்"
- சீவகசிந்தாமணி
"பூமலி அசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுது நன்கியம்புவன் எழுத்தே" - நன்னூல்.
"அணிநிழல சோகமமர்ந் தருணெறி நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பா�சறுப் பவரே"
- யாப்-காரி-உரை.மேற்கோள்
"சாறு கொண்டளி மூசும் அசோகனே
சார்ந்தவர்க் கருள் செய்யும் அசோகனே"
- திருக்கலம்பகம்.
இப்பாக்களினின்றும் 'அசோகமரம்' ஜைனசமயத்தைச் சார்ந்ததென ஐயமின்றித்
தெளிந்தோம். இவ்வுண்மையால் ஒட்டக்கூத்தர் கூறும் எண்ணாயிரம் மூகரும்
எண்பெருங் குன்றமும் ஜைன சமயத்தைச் சார்ந்தவையெனச் சொல்லாமலே
விளங்கும். திரு. தி.நா.சு. எண்ணாயிரம் மூகரும் ஆசீவகர் என எழுதியது
பொருந்தாது. ஆசீவக சமயக் கடவுளாகிய மற்கலி மட்டும் மூகரேயன்றி அச்சமய
சாதுக்கள் பேசாமடந்தைகளல்லர் என்பதை திரு.நா.சு. அறியாதது
வருந்தத்தக்கது. எனவே ஒட்டக்கூத்தர் கூறும் எண்ணாயிர மூகர்கள் என்பது
ஜைன முனிவர்களே யாவர்.
ஜைன முனிவர்கள் சில விரத நாட்களில் உபவாசங்களை (பட்டினி நோன்பு)
மேற்கொள்வார்கள். அந்நாட்களில் மெளன விரதத்தையும் கடைபிடிப்பார்கள்.
இரவுக் காலங்களில் எக்காலத்தும் பேசவே மாட்டார்கள். இந்நிலையையே 'மூகர்'
எனப் பா�கசித்துள்ளார் ஒட்டக்கூத்தர். மேலும் ஜைன அறவோர்கள் உலகியல்
சம்பந்தமான ஆசை வார்த்தைகளையும் பாப வார்த்தைகளையும் துறந்து அறவுரை
பகர்வதையே நோன்பாகக் கொண்டவர்களாகையால் தங்களை இகழ்வோரையும்
புகழ்வோரையும் பகையாமலும் பாராட்டாமலும் மெளனமாகச் செல்வார்கள்.
இத்தூய ஒழுக்க நிலையை,
"இகழ்வார்களை வெகுளார் இடருழவார் பிறவிகழார்
புகழ்வார்களை அருளார் மகிழ்புரியார் பிறமகிழார்
திகழ்வான் முடிமிசை வாழ்சினவரன் யானெனுநினைவி
நிகழ்வாரிரு திறமார் துறவரசாள் நிருமலரே"
என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் அறியலாம். இத்தகைய சிறப்பமைந்த
துறவிகளையே மூகர் என்றனர். மகாத்மா காந்தியடிகளின் உபவாசத்தையும்
மெளன விரதத்தையும் நாம் நேரே கண்டுள்ளோம். இன்னேரன்ன பல சான்றுகளால்
ஒட்டக்கூத்தர் கூறும் எண்ணாயிர முனிவர்களும் எட்டு வெற்புகளும் ஜைன
அறவோர்களையும் அத்தூயோர் தவமிருந்த மலைகளையுமே குறிக்கும் என ஐயமறத்
தெளிந்தோம். இதனை வலியுறுத்த மற்றொரு வரலாற்றை ஆராய்வோம்.