176 வந்தித்துஆய்ந்து, ஓதினும், சொல்லினும், கேட்பினும்
வெந்து வினையும் விடும்
 

இந்நூலினைப் போற்றி உணர்ந்தாலும் மற்றவர்க் குரைத்தாலும் மற்றவர் கூறக் கேட்டாலும் அவரிடம் இறுகியுள்ள வினைகள் அழிந்தொழியும் என்பதாம்.


அருங்கல செப்பின் பயன்கள்

177 தப்பினில் மீளா, கடுந்தவம் நீர்உற்ற
உப்பினில் மாய்ந்து கெடும்
 

இந்நூலில் கூறிய நெறிமுறைகளைத் தவறாது மேற்கொள்பவரின் தீவினைகள் நீரில் கரையும் உப்பு போல் மாய்ந்து தொழியும்.


178 காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

ஆசை, வெகுளி, மயக்கம் இவை மூன்றும் அடியோடு ஒழியுமானால் பிறவிப்பிணியும் அவற்றுடன் ஒழியும் என்பதாம்.


179 முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்கெல்லாம்
சித்தி அருங்கலச் செப்பு.

உயர்ந்தவை அனைத்தையும் அளிக்கவல்ல இந்நூல் வீட்டு நெறியாதார்க்கு அந் நெறியினை உணர்ந்தும் ஆற்றல் பெற்றதாகும்.


180 தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச் செப்பு.

தீர்த்தற்கரிய தீவினைகளை நீக்கி வீட்டினை அளிக்கும் ஆற்றல் பெற்ற இந்நூலினை ஆய்ந்துணர்ந்து அதன் படி நடப்பாயாக.


181 நச்சரவு அணிநிழல் பச்சைமா மலைதனை
நிச்சலும் நினைப்பவற்கு அச்சம்இல்லையே.
 

நஞ்சினைப் பெற்ற பாம்பின் பட நிழலில் வீற்றிருக்கும் பச்சைமலை போன்ற பார்சுவ தீர்த்தங்கரரை நாள்தோறும் தொழுவார்க்குப் பிறவித்துன்பங்கள் இல்லை என்பதாம்.


அருங்கலச் செப்பு - மூலமும் உரையும் முற்றும்.